திங்கள்கிழமை நடந்த விவாதத்திற்குப் பின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாளை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிற்பகல் மீண்டும் இரு அவைகளும் கூடும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை தேசிய தலைநகரில் உள்ள பார்லிமென்ட் ஹவுஸ் அனெக்ஸில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து மாலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு (Women's Reservation Bill) ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால், தற்போதைய சிறப்பு நாடாளுமன்றக் கூட்டதொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலத்தில் மாநிலங்களவை இந்த மசோதாவை மார்ச் 9, 2010 அன்று நிறைவேற்றியது. இருப்பினும், மக்களவையில் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இரண்டு முறை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டாலும் நிலுவையிலேயே இருந்து காலாவதியாகிவிட்டது.
ஒரிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சி, தமிழகத்தின் திமுக, அதிமுக போன்ற கட்சிகளும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாவுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிக்கவில்லை. இந்தக் கட்சிகள் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா (Women's Reservation Bill) கொண்டுவரபட்டால் ஆதரவாக வாக்களிக்குமா என்பது தெரியவில்லை.
அமைச்சரவையில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்தச் செய்தியை வரவேற்றிருக்கிறார்.
"மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை. மத்திய அமைச்சரவையின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்." என்று தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், "மசோதாவின் விவரங்களுக்கு காத்திருக்கிறோம். இது குறித்து சிறப்புக் கூட்டத்திற்கு முன் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நன்றாக விவாதிக்கப்பட்டிருக்கலாம். ரகசியத் திரையின் கீழ் செயல்படுவதற்குப் பதிலாக ஒருமித்த கருத்தை உருவாக்கியிருக்கலாம்" என்றும் கூறியிருக்கிறார்.
முழுவதும் இந்தியில் தான் இருக்கு... ஆத்திரத்தில் நிகழ்ச்சி நிரலை கிழித்தெறிந்த திருச்சி சிவா
கடந்த 75 ஆண்டுகளில் நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து தலைமை அதிகாரிகளுடன் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு இரு அவைகளும் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டன. இரு அவைகளும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அவைகளும் செவ்வாய்கிழமை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் அமர்வுகளை நடத்தும்.
மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை பிற்பகல் 1.15 மணிக்கு புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் கூடும் என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். மாநிலங்களவையில் அதன் தலைவர் ஜக்தீப் தன்கர் சபையை ஒத்திவைத்து, மீண்டும் அவை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடும் என்று கூறினார்.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளில், மக்களவையில் விவாதத்தைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். 75 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணத்தின் சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் மற்றும் படிப்பினைகள் குறித்து பல கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் விவாதம் செய்தனர்.
சிறப்பு அமர்வு செப்டம்பர் 22ம் தேதி வரை நடைபெறும்.