
காஷ்மீரில் வன்முறையாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. வன்முறையாளர்கள் கற்களை வீசுவதால் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி பாதுகாப்பு படையினர் வன்முறையாளர்களை கட்டுப்படுத்துவர்.
பெல்லட் ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்டுவதால் பெல்லட் குண்டுகள் பாய்ந்து பலர் உயிரிழக்கின்றனர். மேலும் பலருக்கு கண்பார்வை பறிபோகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் காஷ்மீரில் கல்வீச்சு, துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டின்போது பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதே உயிரிழப்புக்கு காரணம் என்று புகார் எழுந்தது.
இதையடுத்து பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் குண்டுகள் பயன்படுத்தப்பட உள்ளதாக சிஆர்பிஎஃப் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கழகத்தின் புனே ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் குண்டுகள் காஷ்மீருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இனிமேல் பிளாஸ்டிக் குண்டுகள் தான் பயன்படுத்தப்படும் என்று சிஆர்பிஎப் இயக்குநர் பட்நாகர் தெரிவித்துள்ளார்.