
இண்டிகோ விமானத்தில் நடுவானில் ஒரு எதிர்பாராத ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது. விமானத்தின் உள்ளே எங்கிருந்தோ ஒரு புறா புகுந்ததால், பயணிகள் மத்தியில் சிரிப்பலைகளும், சில நிமிடக் குழப்பமும் ஏற்பட்டது.
இந்த விமானத்தில் பயணித்த கர்ன் பரேக் என்பவர் இந்தக் காட்சியை வீடியோ பதிவு செய்தார். புறா பயணிகளுக்கு இடையேயான ஒடுங்கிய பாதையில் (aisle) சிறகடித்துப் பறப்பதையும், பயணிகள் சிரித்தபடி அந்தச் சம்பவத்தைப் படம்பிடிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. பயணிகள் சிலர் புறாவை வெளியேறும்படி சைகை காட்டுவதையும் காண முடிகிறது.
அந்தக் காணொளியில், ஒரு பயணி அந்தப் புறாவைப் பிடிக்க முயற்சி செய்வதையும் பாரக்க முடிகிறது. மற்ற பயணிகள் ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
கர்ன் பரேக் தனது பதிவில், "விமானத்தில் ஒரு ஆச்சரிய விருந்தினர். இது ஒரு மகிழ்ச்சியான, நகைச்சுவையான தருணம். நான் ரசித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் வடோதரா விமானத்தில் நடந்ததாக அந்தப் பதிவில் உள்ள ஹேஷ்டேக் மூலம் அறிய முடிகிறது.
இந்தச் சம்பவம் விமானப் பயணிகளுக்கு நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு, மெல்ல விமான சேவை சீரடையத் தொடங்கிய நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விமானிகளின் பணி நேர விதிகள் (FDTL) மாற்றப்பட்டதால் ஏற்பட்ட விமானக் குழுவினரின் பற்றாக்குறை காரணமாக, இண்டிகோ விமானச் சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை மட்டும் இண்டிகோவின் 450-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து, விமானிகளின் பணி நேர விதிக்கு (FDTL) அரசு இடைக்காலத் தடை விதித்தது. டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விமானச் சேவை சீரடையும் என இண்டிகோ விமான நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.