
அமெரிக்க போர் விமானங்கள் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் "போலியானவை" என்று இந்திய அரசு ஞாயிற்றுக்கிழமை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்கா, ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது இரவுநேரத் தாக்குதல்களை நடத்தியது. ஈரான் பதிலடி கொடுத்தால் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகுதான் இந்திய வான்வெளி பயன்பாடு குறித்த வதந்திகள் பரவின.
PIB விளக்கம்:
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் (PIB) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு, தனது 'X' சமூக ஊடகப் பக்கத்தில், "ஆபரேஷன் #MidnightHammer இன் போது ஈரானுக்கு எதிராக விமானங்கள் ஏவ அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக சில சமூக ஊடக கணக்குகள் உரிமை கோரியுள்ளன. இந்த கூற்று போலியானது" என்று தெரிவித்துள்ளது.
மேலும், "ஆபரேஷன் #MidnightHammer இன் போது இந்திய வான்வெளி அமெரிக்காவால் பயன்படுத்தப்படவில்லை" என்றும் PIB உண்மைச் சரிபார்ப்பு பிரிவு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஜெனரல் டான் கெய்ன்:
அமெரிக்க கூட்டுப் படைகளின் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஒரு செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க விமானங்கள் பயன்படுத்திய வழித்தடத்தை விளக்கியுள்ளதாகவும் PIB தெரிவித்துள்ளது.
இதன் மூலம், இந்திய வான்வெளி பயன்படுத்தப்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.