நிலவில் மாயாஜாலம் செய்யும் இஸ்ரோ; சந்திரயான் -3 லேண்டரின் படங்களை எடுத்த சந்திரயான் 2!!

By Dhanalakshmi G  |  First Published Aug 25, 2023, 10:00 AM IST

சந்திரயான் -2 ஆர்பிட்டர் சந்திரயான் -3 லேண்டரின் படங்களை எடுத்துள்ளது. இந்தப் படங்களை  வெள்ளிக்கிழமை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. 


சந்திரயான் -3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் கடந்த 23ஆம் தேதி இஸ்ரோ திட்டமிட்டபடி நிலவில் இறங்கியது. இதில் இருந்து ரோவரும் இறங்கியது. தற்போது நிலவில் இறங்கி இருக்கும் ரோவர் 14 நாட்களுக்கு நிலவில் இருக்கும் கனிமவளங்கள் குறித்த தகவல்களை சேகரித்து அனுப்பும். அதுதொடர்பான படங்களையும் பகிரும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுவரை சந்திரயான் விண்கலம் 3 திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் நிலவுக்கு அனுப்பப்பட்டு இருந்த சந்திரயான்-2 ஆர்பிட்டரின் உயர் தொழிநுட்ப தெளிவுத்திறன் கேமராவைக் கொண்டுள்ளது. இது தற்போது நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கலன் தற்போது விக்ரம் லேண்டர் படங்களை எடுத்து இஸ்ரோவுடன் பகிர்ந்துள்ளது.  நிலவில் சுற்றிக் கொண்டிருக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்த விண்கலங்களில் இருக்கும் கேமராவை விட சந்திரயான்-2 விண்கலம்  உயர் தொழில்நுட்ப கேரமராவை கொண்டு இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

திக்... திக்... 20 நிமிடங்கள்... கூலாக நிலவில் குதித்த சந்திரயான்-3! விக்ரம் லேண்டர் கேமரா வீடியோ வெளியீடு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வெள்ளிக்கிழமை டிவிட்டரில் சந்திரயான் -2 ஆர்பிட்டரால் எடுக்கப்பட்ட சந்திரயான் -3 லேண்டரின் படங்களைப் பகிர்ந்து கொண்டது.

சந்திரயான்-3 கடந்த 23ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு சந்திரனின் தென் துருவத்தைத் தொட்டது. இதுவரை நிலவுக்கு அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியவை விண்கலங்களை அனுப்பியுள்ளன. ஆனால், அவர்கள் யாரும் தென் துருவத்திற்கு அனுப்பவில்லை. இந்தியா மட்டுமே இதில் வெற்றி கண்டுள்ளது.  

சந்திரயான்-3 திட்டத்தின் ஆயுள் 14 நாள்தானா? அதற்குப் பின் செயல்பட வாய்ப்பு இல்லையா?

திருவனந்தபுரத்தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் ஜி மாதவன் நாயர் அளித்திருந்த பேட்டியில், ''சந்திரயான் 3-ன் வெற்றியானது இந்தியாவின் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை மேலும் அதிகரிக்கும், சந்திரயான் -3-ன் வெற்றி இந்தியாவின் கிரக ஆய்வுகளைத் தொடங்குவதற்கான முதல் படியாகும்'' என்று தெரிவித்து இருந்தார். 

நிலவின் மர்மங்களை உடைக்குமா ரோவர்?

நிலவில் கருப்பான ஐஸ் படிந்த மர்மம் நிறைந்த மிகப்பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் தான் நிலவின் தென் துருவம் எப்போது ஆராய்ச்சிகளுக்கு புதிராகவே உள்ளது. அந்த புதிரை வெளியே கொண்டு வருவதற்கான ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவின் சுற்றுப் பாதையில் மாற்றம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதலில் நிலவின் முழு தென் பகுதியிலும் சூரிய வெளிச்சம் விழவில்லை. ஆனால் தற்போது நிலவின் சுற்றுப் பாதையில் 5 டிகிரி அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 நிலவு லேசாக சாய்ந்ததாள், தென் துருவத்தில் சில இடங்களில் சூரிய வெளிச்சம் பட்டதாக கூறப்பட்டது.  இந்த இடத்தை தான் தற்போது சந்திரயான்-3 ஆராய்ந்து வருகிறது. இங்கே சூரிய ஒளியே படாத மேடு பள்ளங்கள், குழிகள் உள்ளன.

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் ஏற்பட்ட சிறிய மாற்றத்தால் நிலவின் ஆழத்தில் ஐஸ் கட்டிகள் உருகி இருப்பதாக கூறப்படுகிறது. இது அங்கு தண்ணீரையும் உருவாக்கியது. இந்தப்  பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டால் மனித குல தோற்றம், விண்வெளி ரகசியங்கள் பல வெளிச்சத்திற்கு வரும். மர்மங்கள், ரகசியங்கள் நிறைந்த இந்தப் பகுதிகளில் தான் தற்போது பிரக்யான் ரோவர் தனது ஆராய்சியை தொடங்கியுள்ளது.

நிலவில் இருப்பதாக கருதப்படும் அலுமினியம், பொட்டாசியம், மக்னீசியம், சிலிக்கான், இரும்பு போன்ற கனிமங்கள், கெமிக்கல்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரிய அளவில் உதவும். இவை நிலவில் எப்படி இயங்குகின்றன, இவை எவ்வாறு பூமிக்கு உதவும் என்று பல தகவல்கள தெரியவரும்.

click me!