"அலறுகிறது பீட்டா அமைப்பு...!!" - அவசர சட்டம் கூடாது என கடிதம்

First Published Jan 13, 2017, 4:14 PM IST
Highlights

தமிழகத்தில் சட்டவிரோத விளையாட்டுகளாக ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டிப்பந்தையம் ஆகிய போட்டிகளை நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோருக்கு விலங்குகள் நலஅமைப்பான பீட்டா அவசரக்கடிதம் எழுதியுள்ளது.

ஜல்லிக்கட்டு

தைத் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அதில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த கடந்த 2 ஆண்டுகளாக உச்சநீதமன்றம் தடை விதித்துள்ளதால், இந்த ஆண்டு எப்படியும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த தமிழக மக்கள் பெரிய போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள்.

அவசரச்சட்டம்

இதையடுத்து, மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழகத்தில் அ.தி.மு.க.அரசும், எதிர்க்கட்சியான தி.மு.க. அரசும் கோரிக்கை விடுத்து, போராட்டங்களை நடத்தி வருகின்றன. மாநிலத்தில் பல்வேறு மாவடங்களில் இளைஞர்கள் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கைதாகி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்களும், பேரணிகளும் நடந்து வருகின்றன.

கடிதம்

இந்நிலையில், ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் அணில் மாதவ் தேவே ஆகியோருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

பீட்டா அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறியருப்பதாவது-

தமிழகத்தில் சட்டவிரோத விளையாட்டுப்போட்டிகளான ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டிப்பந்தையம் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த  தடையை நீக்கி,  அவசரச் சட்டம் ஏதும் பிறப்பிக்கக் கூடாது, ஒப்புதல் அளிக்கக்கூடாது  என குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர்களை  எங்கள் பீட்டா அமைப்பு, உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சார்பில் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 13-ந்தேதி இதேபோல் கடிதம் எழுதி இருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறோம். ஆனால், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அமைப்புகள், ஆதரவாளர்கள், கட்சிகள் மத்தியஅரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து அவசரச்சட்டம் பிறப்பிக்க முயற்சித்து வருகின்றன.

இந்திய விலங்குகள் வன்கொடுமைச்சட்டம் 1960-ன் படி, ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிப்பந்தையம் ஆகியவை மாடுகளை கொடுமைப்படுத்தி நடத்தப்படுவை. அதை தடை செய்து கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2011ம் ஆண்டும் இதேபோன்ற உத்தரவை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சகமும் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான எங்கள் பீட்டா அமைப்பு, இந்திய விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றின் வாதத்தையும், மனுதாரரான தமிழக அரசின் வாதத்தையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் பாலி நாரிமன் ஆகியோர் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிப்பந்தையம், காளைச்சண்டை சட்டவிரோதமானது எனத் தெரிவித்துவிட்டது.

ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது மாடுகளை ஒரு சிறிய இடத்தில்  அடைத்து வைத்து, அதற்கு ஆத்திரமூட்டும் சூழலை உண்டாக்குகிறார்கள். அதை வலுக்கட்டாயமாக ஓடவைத்து அந்த மாட்டின் உயிருக்கும், அதை அடுக்கும் மனிதர்கள் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கப்படுகிறது. 

 இதை 2012, 2014ம் ஆண்டு பார்வையிட்ட மத்திய கண்காணிப்பாளர்களும் உறுதி செய்துள்ளனர். நீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை மீறி ஜல்லிக்கட்டுபோட்டி நடக்கிறது, தேவையில்லாமல், மாடுகளுக்கு காயம் ஏற்படுகிறது என சான்று அளித்துள்ளனர்.

மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது, மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளுக்கு மதுவை கட்டாயமாக குடிக்க வைக்கிறார்கள், அவற்றின் வாலை பிடித்து முறுக்கி, திருகுகிறார்கள்.

கம்பு, கத்தியை வைத்து குத்தி காயம் ஏற்படுத்துகிறார்கள், மூக்கில் இருக்கும் கயிற்றை பிடித்து இழுத்து காயம் ஏற்படுத்துகிறார்கள், மாடு திமிறி ஒடும் போது அதன் மீது ஏறி அமர்ந்து மாடு பிடிப்பவர்கள் அதனை கொடுமைப்படுத்துகிறார்கள்.

அப்போது மாடுகள் அதனைக் கண்டுபயந்து, ஓடும்போது பார்வையாளர்கள் மாடத்தில் புகுந்து ஏராளமானோருக்கு காயம் ஏற்படுகிறது. சிலர் தப்பித்து ஓடும்போது நெரிசல் ஏற்பட்டு கை, கால் முறிவு ஏற்படுகிறது. மாடுகளும் பயத்தில் ஓடி பள்ளத்திலும், தடுப்புகளிலும் மோதி கடுமையான காயத்தில் சிக்குகின்றன, சில நேரங்களில் மரணமடைகின்றன.

கடந்த 2010 முதல் 2014 வரை 1100 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். 17 பேர் இறந்துள்ளனர். ஆதலால் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கி அவசரச்சட்டம் பிறப்பிக்கக் கூடாது

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!