சமத்துவபுரங்களில் ஒற்றுமையாக வாழும் அனைத்து சமுதாய மக்கள்: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில்!

By Manikanda Prabu  |  First Published Dec 5, 2023, 5:40 PM IST

சமத்துவபுரங்களில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்வதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது


நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், சமத்துவபுரங்களில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழுகின்றனர் என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கேள்விக்கு ஒன்றிய ஊரகவளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதில் அளித்துள்ளார்.

“பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் சாதிப் பிரிவின்றி வீடுகள் கட்ட அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா?  அப்படியானால், அதன் விவரங்களைத் தருக?; சாதியின் அடிப்படையில் அந்தந்த குடியிருப்புகளில் அரசு வீடுகள் கட்டுவது அரசியலமைப்பின் சமத்துவப் பிரிவின் நோக்கத்துக்கு எதிரானதில்லையா?; மிழ்நாடு அரசு 200க்கும் மேற்பட்ட ‘சமத்துவ புரங்களை’ உருவாக்கியுள்ளது. சமத்துவ புரங்களில் அனைத்து சாதியைச் சேர்ந்த மக்களுக்கும் தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளது அரசுக்குத் தெரியுமா?, அப்படியானால், அதன் விவரங்கள்?: PMAY-G-திட்டத்தின் கீழ் அத்தகைய சமத்துவ புரங்களை அமைக்க ஒன்றிய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” ஆகிய கேள்விகளை நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுப்பியிருந்தார்.

Latest Videos

undefined

அதற்கு பதிலளித்த ஒன்றிய ஊரகவளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, “அனைவருக்கும் வீடு" என்ற நோக்கத்தோடு , கிராமப்புறங்களில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் 2.95 கோடி வீடுகளை கட்டுவதற்கான ஒட்டுமொத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள், சமூகப் பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு (SECC) 2011 இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகிறார்கள். பயனாளிகளின் பட்டியல் கிராம சபையால் உரிய விதத்தில் சரிபார்க்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் சாதி பாகுபாடின்றி வீடுகள் வழங்கப்படுகின்றன.

PMAY-G இன் கீழ், தேசிய அளவில் குறைந்தபட்சம் 60% வீடுகள் SC/ST குடும்பங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. மேலும், SC மற்றும் ST ஆகிய இரு பிரிவிலிருந்தும் தகுதியான பயனாளிகள் இல்லாவிட்டால், மாநிலங்கள் இலக்குகளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. மேலும் SC/ST பயனாளிகள் தீர்ந்துவிட்டால், தலைமைச் செயலாளரால் முறையாக கையொப்பமிடப்பட்ட கடிதத்தின் மூலம் மாநிலம்/யூனியன் அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு "மற்றவர்கள்" பிரிவில் இருந்து பயனாளிகளுக்கு இலக்கை ஒதுக்கலாம்.

சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டி தள்ளி வைப்பு!

சமத்துவபுரம் அமைப்பதென்பது தமிழக அரசின் முயற்சி. சமூக நீதியை மேம்படுத்தவும், தந்தை பெரியாரின் சமூக சமத்துவச் செய்தியைப் பரப்பவும், 1997-98 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக "பெரியார் நினைவு சமத்துவபுரம்" என்ற திட்டம் தொடங்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 8 முதல் 9 ஏக்கர் வரை  நிலம் கண்டறியப்பட்டு, அதில் சமத்துவபுரம் (சமத்துவ கிராமம்) அமைக்கப்படுகிறது. அதில் 100 வீடுகள், தண்ணீர் வசதி, சாலைப் பணிகள், தெருவிளக்குகள், விளையாட்டு மைதானம் , பூங்காக்கள், சமுதாய கூடம், நூலகம், அங்கன்வாடி, நியாயவிலைக் கடை, பள்ளி கட்டிடம் மற்றும் பள்ளி கழிப்பறை போன்ற அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. அதிலுள்ள 100 வீடுகளில்  SC-40, BC-25, MBC-25, மற்றவர்கள்-10 என்ற விகிதத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1997 முதல் 2001 வரையிலும், 2008 முதல் 2011 வரையிலும் இதுவரை 238 சமத்துவபுரங்களைத் தமிழ்நாடு  அரசு நிறுவியுள்ளது. அவற்றில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழுகின்றனர்.

சமத்துவபுரங்கள் அமைக்கும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசிடம் இல்லை. PMAY-G திட்டமானது சாதி ,  மத பாகுபாடின்றி அனைவருக்கும் இரண்டு அறைகள் கொண்ட கச்சா  வீடுகளை அளிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது. அந்த வீடுகளில் அடிப்படை வசதிகள். கழிவறைகள், மின்சாரம் , சமையல் எரிவாயு இணைப்புகள் முதலானவற்றைத் தற்போதைய திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் உறுதி செய்யப்படுகின்றன. ஒன்றிய அரசு ஏற்கனவே வறுமை ஒழிப்பு, ஊதிய வேலைவாய்ப்பு, கிராமப்புற உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.” இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

click me!