கும்பல் கும்பலாக மயங்கி விழுந்த மக்கள்..! தொழிற்சாலை விஷவாயு கசிவால் ஆந்திராவில் அதிர்ச்சி..!

By Manikandan S R SFirst Published May 7, 2020, 9:44 AM IST
Highlights

தொழிற்சாலைக்கு வெளியே பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவிய ரசாயன வாயு அதிக அழுத்தத்துடன் வெளியேறி இருக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும், மக்கள் சாலையில் நடந்து சென்றவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே இருக்கிறது ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமம். இங்கு எல்.ஜி பாலிமர் என்கிற தனியார் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் இந்த தொழிற்சாலையில் இருந்து ரசாயன வாயு கசிந்து வெளியேறி இருக்கிறது. தொழிற்சாலைக்கு வெளியே பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவிய ரசாயன வாயு அதிக அழுத்தத்துடன் வெளியேறி இருக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும், மக்கள் சாலையில் நடந்து சென்றவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் ஆந்திர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் மீட்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே விஷவாயு தாக்கியதில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் தற்போது மரணம் அடைந்திருக்கின்றனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தொழிற்சாலையை சுற்றி மூன்று கிலோ மீட்டர் அளவில் விஷவாயு பரவி இருப்பதால் அப்பகுதியில் இருக்கும் கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

click me!