அரசின் வருமானத்தை விட மக்கள் நலனே முக்கியம்... மாஸ் காட்டிய கேரள முதல்வர்..!

By vinoth kumarFirst Published May 6, 2020, 5:01 PM IST
Highlights

அரசின் வருமானத்தை விட மக்கள் நலனே முக்கியம் என்பதால் கேரளாவில் வரும் 17ம் தேதி வரை மது கடைகள் மூடியிருக்கும்  என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

அரசின் வருமானத்தை விட மக்கள் நலனே முக்கியம் என்பதால் கேரளாவில் வரும் 17ம் தேதி வரை மது கடைகள் மூடியிருக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 3 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால், பல்வேறு மாநில அரசுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். சில மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. கேரளாவில் கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பளத்தை 5 தவணைகளாக, அதாவது ஒவ்வொரு மாதமும் 6 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு மூன்றாம் கட்டத்தில் இந்தியா உள்ளது. சிவப்பும் மண்டலங்கள் அல்லாத பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்ப மத்திய அரசு சில தளர்வுகள் ஏற்படுத்தியது. அதில் மிக முக்கியமானது மதுபான கடைகளை திறக்க அளித்த உத்தரவு தான். மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு மதுவை வாங்கி குவித்து வருகின்றனர். இதனால், பல்வேறு மாநிலங்களில் சுமார் நாள் ஒன்று 50 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதை போல தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து இதர பகுதிகளில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் இயங்க உள்ளது. 

இந்நிலையில், கேரளாவில் ஊரடங்கு காலம் முடைவடையும் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதியில்லை என்று  முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மதுபான கடைகள் திறப்பது, அதற்கு பாதுகாப்பிற்காக காவல் துறையினரை பணியில் அமர்த்துவதற்கு விருப்பமில்லை. மேலும்,  மற்ற மாநிலங்களைப் போன்றே கேரளாவும் பொருளாதார சீர் அழிவை சந்தித்துள்ளது. ஆனாலும், அரசின் வருமானத்தை விட மக்கள் நலனே முக்கியம் என்று முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த முடிவுக்கு அம்மாநில மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

click me!