பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்
மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். தூய்மை இந்தியா திட்டத்தின் 9ஆம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக "ஏக் தரீக் ஏக் கன்டா ஏக் சாத்" எனப்படும் ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம் என பிரதமர் நரேந்திர மோடியின் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், மனதின் குரல் வனொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், “காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு நாடு தழுவிய தூய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது. அதற்கு நேரம் ஒதுக்கி, தூய்மை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன். இந்த தூய்மை இயக்கமே, காந்தியடிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.” எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.
undefined
இந்த நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற தூய்மைப் பணி இயக்கத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலைகளில் கிடைந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினார்.
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தூய்மைப் பணியாளர்கள் அணியும் சீருடையை அணிந்து கொண்டு ஹரியானாவின் குருகிராம் நகரில் உள்ள வீதியை சுத்தம் செய்தார். அப்போது பேசிய அவர், “வந்தே பாரத் ரயில்களில் 14 நிமிட தூய்மைப்படுத்தல் நெறிமுறை தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று 35 இடங்களில் இது தொடங்கப்படும். பின்னர் விரிவுபடுத்தப்படும்.” என்றார்.
நவம்பரில் இந்தியா வரும் சத்ரபதி சிவாஜியின் புலி நக ஆயுதம்!
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், சீதாபூர் நகரில் தூய்மைப் பணியை மேற்கொண்டார். அவரோடு இணைந்து ஏராளமானோர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். மும்பையில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் மகாராஷ்ட்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார்.
பெங்களூருவில் சர்ச் தெருவை சுத்தம் செய்து கனரா வங்கி ஊழியர்கள் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அதேபோல், பெங்களூருவின் எம்ஜி சாலை, கப்பன் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி நகர வீதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “சுதந்திர தின உரையின் போது, பிரதமர் தூய்மை பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தார். நிறைய பேருக்கு முதலில் புரியவில்லை, ஆனால் மெதுவாக அது ஒரு வெகுஜன இயக்கமாக மாறியது. முதல் ஆண்டில் 4 லட்சத்திற்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டது. தூய்மை பணியை செய்வதுல் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.” என்றார்.
நாடு முழுவதும் 9.20 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் மெகா தூய்மை இயக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், தனியார் துறையினர், அரசு அதிகாரிகள், பிரபலங்கள் என பலரும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.