சின்னாபின்னமாகப் போகும் ப.சிதம்பரம்... எழுந்திருக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து புதிய நெருக்கடிகள்..!

By vinoth kumarFirst Published Aug 25, 2019, 11:57 AM IST
Highlights

மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தவறாக பயன்படுத்துவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரத்திற்கு விளக்கம் கேட்டு இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தவறாக பயன்படுத்துவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரத்திற்கு விளக்கம் கேட்டு இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணையில் உள்ளார். இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் கடந்த ஜனவரி 11-ம் தேதி ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவருக்காக வேறு மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அவரது வழக்கு விசாரணையில்  உள்ள நிலையில் ப.சிதம்பரமும் மூத்த வழக்கறிஞர் உடையுடன் நீதிமன்றத்தில் ஆஜராகினார். 

இந்நிலையில், ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் வழக்கு விசாரணையில் உள்ள நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராகுவது அவரது மூத்த வழக்கறிஞர் பதவியை தவறாக பயன்படுத்தியதாகும். எனவே, ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி  நளினி சிதம்பரம் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை திரும்பப்பெற வேண்டும் எனக்கோரி கோபிகிருஷ்ணா என்ற பத்திரிகையாளர் ஜனவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்தை உச்ச நீதிமன்ற துணை பதிவாளர் கடந்த மே 31-ம் தேதி அகில இந்திய பார்கவுன்சிலுக்கு அனுப்பினார். அந்த புகார் கடிதத்தின் அடிப்படையில், அகில இந்திய பார்கவுன்சில் இணைத் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரத்திற்கு விளக்கம் கேட்டு பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வரும் 28-ம் தேதி இருவரும் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி விளக்கம் தரவேண்டும் என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் வளையத்திற்குள் சிக்கியுள்ள ப.சிதம்பரத்திற்கு தற்போது இந்த நோட்டீஸ் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!