
நாடு முழுவதும் 800 மாவட்ட தலைமை தபால் நிலையங்களில், 2 ஆண்டுகளுக்குள் பாஸ் போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படும்’’ என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 3 ஆண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் சாதனை விளக்க நிகழ்ச்சி நடந்தது.
இதில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டின் மூலை முடுக்கில் உள்ளவர்களுக்கும் பாஸ்போர்ட் சேவை வசதிகள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 150 மாவட்ட தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இன்னும் 2 ஆண்டுகளில், நாட்டில் 800 மாவட்ட தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டு விடும்.
பாஸ்போர்ட் பெறுவதற்காக எந்த குடிமகனும் நெடுந்தூரம் பயணம் செய்ய கூடாது. இதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் தபால் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளன.
மேலும், பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகளும் எளிமைப் படுத்தப்பட்டு வருகின்றன. பாஸ்போர்ட் பெறும் நடைமுறை கள் வெளிப்படையாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாத நிலை உருவாகி வருகிறது.
இவ்வாறு வி.கே.சிங் கூறினார்.