
ராஜஸ்தானில் பசு பாதுகாப்பு கும்பலால் தாக்குதலுக்குள்ளான தமிழக அதிகாரிகள், பசு மாடுகளுடன் தமிழகம் திரும்புகின்றனர். வழிநெடுங்கிலும் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக கால்நடைத்துறைக்கு உயர் ரக பசுக்களை வாங்குவதற்காக அதிகாரிகள் ராஜஸ்தானுக்கு சென்றனர். அங்கு ஜெய்சல்மார் சந்தையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பசுக்கள் வாங்கப்பட்டன. சுமார் 80 பசுக்கள் தமிழகத்திற்கு வாங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஞாயிறன்று பசுக்களுடன் அதிகாரிகள் தமிழகம் திரும்பிக் கொண்டிருந்தனர். பார்மர் மாவட்டம் அருகே வந்தபோது, பசு பாதுகாப்பு கும்பலை சேர்ந்த 50 பேர் தமிழக அதிகாரிகளின் வாகனங்களை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர்.
லாரியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. ஓட்டுனரின் தலையில் தாக்கப்பட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். இதற்கிடையே தமிழக அதிகாரிகளுக்கும் அடி, உதை கொடுக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்பின்னர் மருத்துவமனையில் தமிழக அதிகாரிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அவர்கள் தமிழகத்தை நோக்கி புறப்பட்டனர்.
திரும்பும் வழியில் மீண்டும் அசம்பாவிதம் நடைபெறக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக பாதுகாப்பு துறை அதிகாரிகளை தமிழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினர்.
இதனையடுத்து ஒவ்வொரு மாநில எல்லையை கடக்கும் வரை அந்தந்த மாநில போலீஸார் பாதுகாப்பு அளிக்க முன்வந்துள்ளனர். ஏற்கனவே மாட்டிறைச்சி விவகாரத்தில் வடமாநிலங்களில் ஆங்காங்கே வன்முறைகள் அரங்கேறி வருவதால் பசு மாடுகளுடன் தமிழகம் திரும்பும் அதிகாரிகள் இரவு நேரத்தில் மட்டுமே பயணித்து வருகின்றனர். அவர்கள் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.