
இண்டிகோ தனியார் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரை விமான ஊழியர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அந்த நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
சென்னையில் இருந்து டெல்லிக்கு இண்டிகா விமானத்தில் பயணம் செய்த ராஜீவ் கட்டியால் என்ற பயணி விமானத்தில் இருந்து இறங்கி பேருந்து மூலம் விமான நிலையத்திற்கு செல்ல முயன்றார்.
அப்போது விமான ஊழியர்களுக்கு அந்த பயணிக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜிவ் கட்டியாலை ஊழியர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
ராஜிவ் காட்டியால் கெட்ட வார்த்தையில் அவர் திட்டியதாகவும், அதனால், விமான ஊழியர்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்த இண்டிகோ ஊழியர்களின் செயலுக்கு நாடு முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழும்பின.
அந்த வீடியோவில், விமானத்தில் இருந்து இறங்கிய பின்னர், விமான நிலைய பேருந்தில் ஏறிச் செல்ல முயன்ற அவரை, ஊழியர் ஒருவர் பிடித்து இழுத்தார்.
ராஜீவை அந்த ஊழியர் தரையில் தள்ளி கட்டுப்படுத்த முயன்ற போது, அவர் கோபத்தில் ஊழியரை தாக்கினார். பின்னர் சில அதிகாரிகள் சேர்ந்து அந்த பயணியை தாக்கினர்.
இது தொடர்பான வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இண்டிகோ விமான நிறுவனத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த சம்பவத்திற்கு மிகவும் வருந்துவதாகவும், அந்த பயணியிடம் மூத்த அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, இதற்கு காரணமான அந்த ஊழியரை பணி நீக்கம் செய்ததாகவும் அதில் இண்டிகோ தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைவர் ஆதித்ய கோஷ் அந்த பயணியை தானே தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.