#Budget2022 : ஜனாதிபதி உரையுடன்.. இன்று தொடங்கும் "பட்ஜெட்" கூட்டத்தொடர் !!

By Raghupati R  |  First Published Jan 31, 2022, 9:26 AM IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11.00 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்குகிறது. மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் ஆகிறது.


இந்திய நாடாளுமன்றம் பொதுவாக பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என ஆண்டுக்கு 3 முறை கூடுகிறது. இதில் இந்த ஆண்டின் முதல் கூட்டமான பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கொரோனா காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால், இந்த ஆண்டும் மைய மண்டபத்துடன், இரு அவைகளின் அறையிலும் உறுப்பினர்கள் அமர வழிவகை செய்யப்பட்டு உள்ளது. ஜனாதிபதி உரையை தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 

Latest Videos

undefined

இதைத்தொடர்ந்து 2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது வருகிற 2-ந்தேதி விவாதம் தொடங்குகிறது. இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி வருகிற 11-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நடக்கிறது. 

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த நேரத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது.

இது தொடர்பாக இரு அவைகளின் கட்சித்தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலங்களவை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரையும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைபெறும்என்பது குறிப்பிடத்தக்கது.

click me!