20 ஆண்டுகளில் முதல் முறையாக மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 'இந்தியா' கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.
எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள், 20 ஆண்டுகளில் முதல் முறையாக மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளன. இதற்கு முன் 2003ஆம் ஆண்டில் தான் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்தியா கூட்டணியின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மாநிலங்களவையில் பா.ஜ.க.வை ஓரம் கட்டுவதற்கான வியூகத்தை எதிர்க்கட்சிகள் இப்போது முடிவு செய்து வருகின்றன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் மணிப்பூரில் நடந்த இனக்கலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியதால், நான்காவது நாளாக முடங்கியது. இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள நிலைமை குறித்து பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைக்க இதுதான் சிறந்த வழி என்று 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் 'இந்தியா' கூட்டணியின் திட்டம் குறித்து பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "எங்கள் முதல் ஆட்சிக் காலத்திலும் எதிர்க்கட்சி எங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. 2019இல் எங்கள் இடங்கள் 282இல் இருந்து 303 ஆக அதிகரித்தது. இந்த முறையும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரட்டும். நாங்கள் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்" என்று கூறினார்.
2018ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக இதேபோன்ற தீர்மானத்தை கொண்டுவர முயன்றபோது, விவாதமோ வாக்கெடுப்போ நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.