
மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவித்தார். ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.
மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, ஜூலை 21 அன்று காலை 11 மணிக்கு இந்தக் கூட்டத்தொடர் தொடங்கும். தேசியப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை முடிவுகள் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது ஏற்பட்ட இழப்புகள் குறித்து அவசர விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவுள்ளதால், இந்தக் கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு மத்தியில், மழைக்கால கூட்டத்தொடர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எக்ஸில் வெளியிட்ட ஒரு பதிவில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் டிஎம்சி எம்பி அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதத்தைப் பகிர்ந்துள்ளார்.
"ஏப்ரல் 22, 2025 அன்று பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை நாங்கள், இந்தியா கூட்டணியின் தலைவர்கள், மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திடம் முக்கியத் தகவல்களை மறைப்பதாக மத்திய அரசை கார்கே விமர்சித்தார்.
"அரசு வெளிநாடுகளுக்கும், ஊடகங்களுக்கும் தகவல் அளித்துள்ளது, ஆனால் நாடாளுமன்றத்திற்கு அல்ல, இந்திய மக்களையும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் இருட்டில் வைத்திருக்கிறது" என்று அவர் கூறினார்.
பூஞ்ச், உரி மற்றும் ராஜோரியில் பொதுமக்கள் கொல்லப்பட்டது, போர் நிறுத்த அறிவிப்பு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் கார்கே கவலை தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் கூட்டத்தொடரின் போது டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது குற்றச்சாட்டு தீர்மானத்தைக் கொண்டுவர மத்திய அரசு தயாராகி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்த மசோதா தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி வர்மாவின் வீட்டில் உள்ள ஒரு கிடங்கில் எரிந்த நிலையில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த உள் விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழு கடந்த மாதம் அதன் அறிக்கையை பிரதமர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவருக்குச் சமர்ப்பித்தது.
"உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது குற்றச்சாட்டு தீர்மானம் கொண்டுவருவதற்காக நாடாளுமன்ற விவகார அமைச்சர் அனைத்து கட்சிகளுடனும் பேசத் தொடங்கியுள்ளார்" என்று ஒரு மூத்த அதிகாரி உறுதிப்படுத்தினார்.
இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், இந்தியாவில் நீதித்துறை மீது எடுக்கப்பட்ட அரிய நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும். சட்ட மற்றும் அரசியல் விவாதத்தையும் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்கால கூட்டத்தொடர் குறித்த அரசின் அறிவிப்புக்குப் பிறகு, திரிணாமுல் தலைவர் டெரக் ஓ பிரையன் கிண்டலடித்து எக்ஸில் பதிவிட்டார், "நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை எதிர்கொள்ள பயந்து தப்பி ஓடுகிறார்கள்." என்று சாடியிருக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக நாடாளுமன்றம் கூடுகிறது என்பதால், மழைக்கால கூட்டத்தொடர் அரசியல் ரீதியாகப் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.