நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ஆம் தேதி கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு, பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இவை இரண்டும் சேர்த்து பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ஆம் தேதி கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் பொதுத் தேர்தலுக்குப் பின்னர், புதிய அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும். அப்போது வரவிருக்கும் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கப்படும். அது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
பாஜகவின் இரண்டாவது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டும் கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட் இதுவாகும். பிரதமர் மோடி அரசாங்கத்தின் கீழ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால், இடைக்கால பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு: மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜனவரி 31ஆம் தேதியன்று இரு அவைகளிலும் உரையாற்றி, பட்ஜெட் கூட்டத்தொடரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பதன் மூலம் பட்ஜெட் அமர்வு தொடங்கும். பெண் விவசாயிகளுக்கான பிரதமர் விவசாய நிதியை இரட்டிப்பாக்க இடைக்கால பட்ஜெட்டில் முன்மொழியப்படும் என தெரிகிறது. இதன் மூலம், அரசுக்கு ரூ.12,000 கோடி கூடுதல் செலவாகும் என தெரிகிறது.