
சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.
மேலும், சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, ஓசூரில் உள்ள அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வீட்டில் இருந்து மூன்று வேளையும் இன்னோவா கார் மூலம், ஸ்பெஷல் உணவுகளும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சக கைதிகள், சசிகலாவை போல தங்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளை நச்சரிக்க தொடங்கி விட்டனர்.
கைதிகளில் சிலர், தங்கள் வழக்கறிஞர்கள் மூலமாக, சசிகலாவை போல சலுகை தர வலியுறுத்தி, சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கவும் ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில், தமிழக அரசின் கோப்புகள், சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு அனுப்பப்படுவதாக திமுக மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் மத்திய அரசுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால், கர்நாடக சிறைத்துறை வட்டாரம் கடுமையாக ஆட்டம் கண்டுள்ளது. தங்களுக்கு, நெருக்கடி வந்து விடக்கூடாது என்ற அச்சத்தில், சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கவில்லை என்று ஊடகங்களிடம் அடிக்கடி கூறி வருகிறது.
ஏற்கனவே, சென்னை சிறைக்கு மாற்றக் கோரி, உறவினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் நச்சரித்து வரும் சசிகலா, இந்த பிரச்சினையால் மேலும் அப்செட் ஆகி உள்ளார்.