
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானின் பங்கு குறித்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் இந்தியா விவரித்துள்ளது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
"ஜம்மு- காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்த 22 சிறப்புத் தூதர்களை பாகிஸ்தான் அரசு அனுப்பியுள்ளது' என்று அந்நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியானது.
அதன்படி, அந்தத் தூதர்கள், பெல்ஜியம், சீனா, பிரான்ஸ், ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, நியூயார்க் ஆகிய நாடுகளுக்கும், ஸ்விட்ஸர்லாந்தின் ஜெனீவா நகருக்கும் சென்றனர்.
பயங்கரவாதம், எல்லை தாண்டி தாக்குதல் ஆகியவற்றை ஆதரிப்பதில் பாகிஸ்தானின் பங்கு குறித்து மேற்கண்ட நாடுகளிடம் விவரித்துள்ளோம். அத்துடன் பாகிஸ்தான் குறித்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அக்பர் தெரிவித்தார்.