
இந்தியாவின் சர்ஜிகல் ஸ்டிரைக் அதிர்ச்சியில் இருந்து இன்னும் பாகிஸ்தான் மீளவில்லை. அதனால், தான், அடுத்த வாரம், அமிர்தசரஸில் நடக்கும் ஆசியாவின் இதயம் மாநாட்டின் போது இந்திய அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுக்கு தயாராக இருக்கிறோம் என பாகிஸ்தான் தூதர் அப்துல்பாசித் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் பதிலடி தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளும், அவர்களின் முகாம்களும் அழிக்கப்பட்டன.
இந்திய ராணுவம் நடத்திய அந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் மிரண்டு இருக்கிறது. அதன்பின், எல்லை ஓர கிராம மக்கள் மீது சிறிய ரக பீரங்கிகள், துப்பாக்கிகள் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபடும் போது இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இதுவரை எல்லையில் கடந்த 2 மாதங்களில் 100-க்கும் அதிகமான முறை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் அப்பாவி மக்கள் 20-க்கும் மேற்பட்டோரும், 10 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
இதனால், இரு நாடுகளின் எல்லையில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சில நாட்களுக்கு முன்கூட இந்தியாவிடம் இருந்து விதைகள், உரங்கள், உணவுப்பொருட்கள் இறக்குமதியை பாகிஸ்தான் நிறுத்தியது.
இந்நிலையில், இந்திய ராணுவத்தின் அதிதீவிர பதிலடியால் பாகிஸ்தான் ராணுவம் செய்வது அறியாது குழம்பி இருந்த நிலையில், இப்போது, நிபந்தயற்ற பேச்சுக்கு தயாராக இருப்பதாக கூறி பணிந்து வந்துள்ளது.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், ஆஜ்தக் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
இந்தியா அரசுடான நிபந்தனையற்ற பேச்சுக்கு நவாஸ் ஷெரீப் அரசு தயாராக இருக்கிறது. அமர்தசரஸ் நகரில் அடுத்த வாரம் ஆசியாவின் இதயம் என்ற மாநாடு நடக்க இருக்கிறது. இதில் பாகிஸ்தானின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் பங்கேற்கிறார்.
அப்போது, இரு நாடுகளுக்கு இடையே தடைப்பட்டு இருக்கும் அமைதிப்பேச்சு குறித்து இந்தியா பேச விரும்பினால், அதற்கு பாகிஸ்தான் சம்மதிக்கும்.
இரு நாடுகளுக்கும் இடையே தடைபட்டுள்ள பேச்சை தொடங்காமல் இருந்தால், அது ஆண்டு க்க ணக்கில் நீண்டுகொண்டே செல்லும்.
ஆதலால், இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளை பேச்சு மூலமே தீர்க்க முடியும். இரு நாடுகளின் அரசுகளும் அமைதியாக அமர்ந்து தடைபட்ட பேச்சை தொடர வேண்டும்.
எல்லைப் புறங்களில் பதற்றம் அதிகரிப்பதை பாகிஸ்தான் ராணுவமும், அரசும் விரும்பவில்லை. இப்போது எங்கள் நாட்டின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள பகுதியில் நடைபெறும் ஜர்ப் இ அஸ்ப் என்ற ஆப்ரேஷனுக்காக அங்கு படைகள் திருப்பிவிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஒரு போதும் பதற்றம் அதிகரிப்பதை விரும்பவில்லை. அப்படி ஒரு சூழலையும் உருவாக்காது.
பாகிஸ்தானில் இனி ராணுவ ஆட்சி என்பதற்கு வழியில்லை. அங்கு ஜனநாயகத்துக்கு வலுவான சூழல் உருவாகிவிட்டது. மக்களின் குரல் ஜனநாயகத்தை நோக்கி ஒலிக்கத்தொடங்கிவிட்டது. இதனால், எதிர்காலத்தில் அங்கு மீண்டும் ராணுவ ஆட்சிக்கு வாய்ப்பே கிடையாது.
எங்களின் இப்போதுள்ள எண்ணம், எல்லையில் நீண்ட நாட்களாக நீடிக்கும் பதற்றமான சூழல் முடிவுக்கு வர வேண்டும். அதற்கு இந்தியாவுடன் பேச்சுக்கு தயார் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது ஒரு வழியாக பிரதமர் மோடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதப்பட்டாலும், காஷ்மீர் விவகாரத்தை முன்நிறுத்தியே பேச்சுக்கு வருவேன் என முரண்டு பிடித்த பாகிஸ்தான் இப்போது பெட்டிப்பாம்பாக அடங்கி, நிபந்தனை அற்ற பேச்சுக்கு தயார் என்கிறது. இனி பேச்சுக்கு அழைக்க பிரதமர் மோடி தாயாராக இருக்கிறாரா