
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்கி வருவதால் எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.
கொந்தளித்த இந்தியா
இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ல் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதனை அந்நாட்டு ராணுவத்தினர் தொடர்ந்து மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 1-ந்தேதி, இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், இந்திய வீரர்கள் 2 பேரை சுட்டுக்கொன்று, அவர்களது தலையை துண்டித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பள்ளிகள் விடுமுறை
இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த புதன் மற்றும் வியாழனன்று, பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. பதற்றம் காரணமாக ரஜவ்ரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
பீரங்கி குண்டுகள்
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறும்போது, ரஜவ்ரி மாவட்டத்தின் வழியே செல்லும் எல்லையில் நவ்ஷெரா செக்டர் பகுதி உள்ளது. இங்கு நேற்று காலை 7.15-க்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஜங்கர், பவானி, லாம் ஆகிய பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்ட்டது. சிறிய ரக பீரங்கி குண்டுகள், தானியங்கி எந்திர துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் வீரர்கள் பயன்படுத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மக்கள் வெளியேற்றம்
3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த அத்துமீறலால் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர் என்றார். சுமார் 1,500-க்கும் அதிகமான மக்கள் எல்லைப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
268 முறை அத்து மீறல்
பாகிஸ்தான் ராணுவம் ஒரே ஆண்டில் 268 முறை அத்துமீறியுள்ளது. இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே நாடாளுமன்றத்தில் அளித்த பதில்:-
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2016 ஏப்ரலில் இருந்து மார்ச் 2017 வரைக்கும் 268 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக நவம்பர் 2016-ல் மட்டும் 88 முறை பாகிஸ்தான் அத்துமீறியது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.