தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான் : எல்லையில் இருந்து வெளியேறும் பொதுமக்‍கள்

First Published Oct 27, 2016, 5:04 AM IST
Highlights


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்‍கிச் சூட்டில் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த நிலையில், ஆர்.எஸ்.புரா குடியிருப்புப் பகுதியில் இருந்து ஏராளமானோர் வேறு பகுதிகளுக்‍கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி  ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்‍குதலுக்‍கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 7 முகாம்கள் அழிக்கப்பட்டு 35 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர், பல மணி நேரமாக தொடர்ந்து துப்பாக்‍கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பொதுமக்‍கள் 11 பேர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகளும் சேதமடைந்தன. 

இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் தீவிர எதிர்த் தாக்‍குதல் நடத்தி வருகின்றனர். இந்த சண்டையின்போது இந்திய எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்‍கும் ஏராளமானோர் டிராக்டர் போன்ற வாகனங்கள் உதவியுடன் அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.  

click me!