
நாடாளுமன்றத்தில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணித்தது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தின. நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கூட்டம் நடந்தது.
ரூபாய் நோட்டு வாபஸ் பெற்ற விவகாரம் தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ், அதிமுக, - திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின.
இதனையடுத்து இன்று நாடு தழுவிய பந்த் நடத்தப்போவதாகவும், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்,திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த பந்த்தில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளன.
இந்நிலையில் டெல்லியில் இன்று காலை 9.30 மணியளவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தின. இதில் திமுக, அதிமுக கலந்து கொள்ளவில்லை.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட வேண்டிய அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக இன்று மாலை 5 மணியளவில் எதிர்க்கட்சிகள், மத்திய அரசை எதிர்த்து பேரணி நடத்த உள்ளன. அதே நேரத்தில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக பாஜக சார்பிலும் பேரணி நடக்க உள்ளது. இந்த பேரணி செங்கோட்டையில் இருந்து துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.