
பழைய ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக வரும் 23 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதிய 500 ரூபாய் நோட்டு இன்னும் புழக்கத்தில் விடப்படாததாலும், சரியான முன்னேற்பாடுகள் செய்யாததாலும் பல்வேறு வங்கிகளிலும், ATM மையங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளியன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின் போது இவ்விவகாரத்தை எழுப்பிய எதிர்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கின. எனினும் மத்திய அரசு ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தை திரும்ப பெற முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்நிலையில், ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை, மக்களவையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று காலை ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதில், செல்லா நோட்டு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து வரும் 23 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.