
போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் ஒரு பகுதியாக, 274 இந்தியர்களுடன் 4வது சிறப்பு விமானம் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் வந்தடைந்தது.
இந்த விமானம் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டது. 'ஆபரேஷன் அஜய்' மீட்புப் பணிகள் தொடங்கப்பட்ட பின்னர், முதல் முறையாக ஒரே நாளில் இரண்டு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் இருந்து புறப்படும் நான்காவது விமானம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்திருந்தார். "டெல் அவிவில் இருந்து 274 பயணிகளுடன் புறப்படும் இந்த நாளின் 2வது விமானம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, முதல் விமானம் 21 தமிழர்கள் உள்பட 212 இந்தியர்களுடன் வெள்ளிக்கிழமை டெல்லி வந்தது. சனிக்கிழமை வந்த இரண்டாவது விமானத்தில் 28 தமிழர்கள் உள்பட 235 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இன்று மூன்றாவது விமானத்தில் 197 இந்தியர்கள் டெல்லி வந்தனர்.
இஸ்ரேலில் உள்ள சுமார் 18,000 இந்தியர்கள் தாயகம் திரும்ப ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் கடந்த வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு சிறப்பு விமானங்களில் 918 இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர்.
ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினர் அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் மூண்டது. ஹமாஸ் குழுவினரின் தாக்குதல்களில் 1,300க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள். குழந்தைகள் உள்பட பலரை பிணைக்கைதிகளாகவும் வைத்துள்ளனர்.
ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேஸ் பாதுகாப்புப் படையின் தாக்குதல்களிலும் 1,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் குழுவினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.