
நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள முக்கிய காரணிகளில் தண்ணீர் தட்டுப்பாடும் ஒன்று எனவும் அனைத்து தடைகளையும் மீறி இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு திடமாக இருந்தது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாட்டிலேயே மிக உயரமான அணையான சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார்.
நர்மதை ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த அணை குஜராத் மாநிலத்தின் நவகம் என்ற இடத்தின் அருகில் உள்ளது.
இந்த அணையின் உயரம் சுமார் 163 மீ ஆகும். நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 30 அணைகளில் சர்தார் சரோவர் அணைதான் மிகப்பெரியது.
1979 ல் வடிவம் பெற்று 2008 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. குஜராத் மற்றும் சவுராஷ்ட்ரா மக்களுக்கு தேவையான பாசன வசதிக்கான நீர் இங்கிருந்தே எடுக்கப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்த பின்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மோடி நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள முக்கிய காரணிகளில் தண்ணீர் தட்டுப்பாடும் ஒன்று எனவும் அனைத்து தடைகளையும் மீறி இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு திடமாக இருந்தது எனவும் தெரிவித்தார்.
மேலும், நீர் பாசனத்துறையில் தங்களின் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியமைக்காக சர்தார் வல்லபாய் படேலையும், அம்பேத்கரையும் நினைவுக்கூற வேண்டும் எனவும், சர்தார் சரோவர் அணை திட்டத்தை தொடங்கியபோது பல்வேறு தடைகள் வந்ததாகவும் குறிப்பிட்டார்.