ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இன்று சமர்ப்பிக்கவுள்ளது
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி மத்திய அரசு அமைத்தது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆயோக் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தங்களது பணியை தொடங்கிய உயர்மட்ட குழு, ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது குறித்து பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை கேட்டு செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து உயர்மட்ட குழுவுக்கு சுமார் 5000 கருத்துக்கள் சென்றதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல், ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவானது அரசியல் கட்சிகளிடமும் கருத்துக்களை பெற்று நேரில் விவாதித்தது.
இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இன்று சமர்ப்பிக்கவுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
முன்னதாக, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள், அரசியல் கட்சியினர்களிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்டது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை 2029ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொறுத்தவரை நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடக்கிறது. இதுதவிர உள்ளாட்சிகளுக்கும் தனியாக தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கள் மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு தீவிரமடைந்துள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே தேர்தல் நடத்துவதாகும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால், மக்கள் ஒரே நேரத்தில் மூன்று வாக்குகள் செலுத்த வேண்டியது இருக்கும். ஒன்று மாநில சட்டமன்றத்திற்கு, இன்னொன்று நாடாளுமன்றத்துக்கு, மற்றொன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு. இதுபோன்று தேர்தல் நடத்துவதால் செலவு குறையும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படும் அதே வேளையில், இதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டால், அப்போது மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் முழு ஆயுட்காலம் முடியும் முன்னரே கலைக்கப்படுமா அப்படி கலைக்கப்பட்டால் அதற்கு மாநில அரசுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.