ஒருநாள் கலெக்டரான 12 ஆம் வகுப்பு மாணவி! நெகிழ்ச்சி சம்பவம்

First Published Jun 10, 2018, 4:29 PM IST
Highlights
One day student collector in rajasthan


பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவியை ஒரு நாள் ஆட்சியராக நியமித்து கௌரிவித்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. மாணவியை ஊக்குவிப்பதற்காகவே ஒருநாள் ஆட்சியராக அமர வைத்ததாக கூறிய தினேஷ் குமார் யாதவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ராஜஸ்தானில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அண்மையில் வெளியாகியது. ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வந்தனா குமாரி, மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தார். அப்போது தனது எதிர்கால கனவு, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக வேண்டும் என்று தெரிவித்திருந்தார் வந்தனா.

இந்த நிலையில் அவரது லட்சியத்தை ஊக்கிவிக்கும் வகையில் ஜுன்ஜுனு மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் யாதவ், மாணவி வந்தனாவை கடந்த வெள்ளியன்று ஒரு நாள் ஆட்சியராக நியமித்து கௌரவித்தார்.

இது குறித்து வந்தனா குமாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ஒருநாள் ஆட்சியராக இருந்தது எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பெருமையாக உள்ளது என்றார். சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று எதிர்காலத்தில் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக கூறினார்.

குறிப்பாக சமுதாயத்தில் பின் தங்கிய பகுதிகளில் வேலை செய்ய தான் விரும்புவதாகவும் இதற்காக கடினமாக உழைப்பேன் என்றார். ஒருநாள் ஆட்சியராக இருந்த அனுபவம் எதிர்காலத்தில் உதவியாக இருக்கும் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மாநில அளவில் முதலிடத்தைப் பெற்ற வந்தனா குமாரி, தான் ஆட்சியராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது ஆசையை ஊக்குவிக்க முடிவு செய்தோம். எனவே, அவரை ஒரு நாள் ஆட்சியராக என் இருக்கையில் அமர வைத்தேன். அங்கு அவர் சில பணிகளை மேற்பார்வையிட்டார் என்று ஆட்சியர் தினேஷ் குமார் யாதவ் கூறினார். இந்த நிலையில் மாணவியின் ஐ.ஏ.எஸ். கனவை நிறைவேற்றிய ஆட்சியர் தினேஷ் குமார் யாதவ்-ஐ அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

click me!