
இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் சூழலில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளார். மேலும் உலகில் மொத்தம் 108 நாடுகளில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேல் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஒமைக்ரானால் 26 பேர் மட்டுமே இறந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 17 மாநிலங்களில் 358 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்கு ஆகும் காலம் 1.5 முதல் 3 நாட்களாக மட்டுமே உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று உறுதியானவர்களில் 121 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் 44 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று குறிப்பிட்டார். ஆனால் மீதி 18 பேருக்கு தோற்று ஏற்பட்ட காரணத்தை உறுதி செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஒமைக்ரான் பாதித்தவர்களில் 183 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள். 7 பேர் தடுப்பூசி போடாதோர், 2 பேர் ஒரு டோஸ் மட்டும் செலுத்தியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இந்தியாவில் 61 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 89 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் செலுத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
இதனைதொடர்ந்து உலகம் தற்போது 4 வது கொரோனா அலையை எதிர்கொண்டுள்ளது. நாட்டில் டிசம்பர் 23 ஆம் தேதி வரை சுமார் 9 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஐரோப்பா நாடுகளுடன் ஒப்பிடுகையில் வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் அன்றாடம் சுமார் 7000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. கடந்த 4 வாரங்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 10,000க்கும் குறைவாகவே பதிவாகி உள்ளது. இந்தியாவில் முதல் அலை செப்டம்பர் 2020லும், இரண்டாவது அலை மே 2021லும் ஏற்பட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதாக அவர் கூறினார். 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதை பாசிடிவிட்டி விகிதத்தில் கணக்கீடப்படுகிறது.
அந்த வகையில் உலகளவிலான பாசிடிவிட்டி 6%க்கு மேல் உள்ளது. இந்தியாவில் சராசரியாக 5.3% உள்ளது. இருப்பினும் பிராந்தியங்களில் வேறுபாடு இருக்கின்றது. கேரளா, மிசோரம் மாநிலங்களில் பாசிடிவிட்டி ரேட் மட்டும் கவலையளிப்பதாக இருக்கிறது. 20 மாவட்டங்களில் வாராந்திர பாசிடிவிட்டி ரேட் 5 முதல் 10% ஆக இருக்கிறது. இந்தியாவில் இப்போதுவரை டெல்டா தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்