#BREAKING: Omicron : அதிகரிக்கும் ஒமைக்ரான்.. அலர்ட் நிலையில் இந்தியா..!

By Thanalakshmi VFirst Published Dec 5, 2021, 3:11 PM IST
Highlights

டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், நாட்டில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை  5 ஆக உயர்ந்துள்ளது.
 

கிழக்குஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் இருந்து டெல்லி வந்த நபருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், டெல்லியில் முதல்முதலாக 37 வயதாக ஆண் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றிற்கு பாதிப்புக்குள்ளான நபர், மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் வெளிநாடுகளில் இருந்து டெல்லி விமானம் நிலையம் வந்தவர்களில் கொரோனா உறுதியான 17 பேரில் 12 பேரின் மாதிரிகள் மரபியல் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், அதில் தான்சானியாவில் இருந்து வந்த ஒருவருக்கு மட்டும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் வகை  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களுர் வந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 66 வயதுடைய நபருக்கு முதல் முதலாக ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த நபர் நெகட்டிவ் சான்றிதழுடன் துபாய் சென்றுவிட்டு திரும்பிய நிலையில், அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் பெங்களுரில் வெளிநாட்டிற்கு செல்லாத நிலையில், 46 வயதாக மருத்துவர் ஒருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இதை தொடர்ந்து நேற்று, ஜிம்பாப்வே நாட்டிலிருந்து இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய 72 வயதுடைய நபர் ஒருவருக்கும், அதேபோல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிராவிற்கு திரும்பிய 33 வயதான நபருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது தான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுபடுத்த, நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பரிசோதனையும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளிலும், விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானவர்களின் மாதிரிகளும் மரபியல் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்ப அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவியுள்ளது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது.

click me!