
புதிய ரூபாய் நோட்டுகள் முழுமையாக புழக்கத்திற்கு வராத நிலையில், ரயில்கள் மற்றும் பேருந்துகளில், இன்று முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, கடந்த மாதம் 8-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனையடுத்து, புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பணம் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரெயில் மற்றும் பேருந்துப் பயணம் போன்ற அத்யாவசிய சேவைகளுக்கு, வரும் 15-ம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுக்கள் பெறப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த காலக்கெடுவை மாற்றி, பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் ரெயில்களில், நேற்று வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ரயில்கள் மற்றும் பேருந்துகளில், பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும் காலக்கெடு நள்ளிரவுடன் நிறைவடைந்தது. ஏற்கெனவே, பணத்தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில், இன்று முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்புக்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.