
பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமெரிக்கா மற்றும் ஜப்பானிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஐநா சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்ற சுஷ்மா ஸ்வராஜ், கூட்டத்தின் நடுவே அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, வடகொரியா நடத்தும் அணு ஆயுத சோதனை, கடல்சார் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் ஆகியவை குறித்தும் கொரிய தீபகற்பம் உட்பட ஆசிய கண்டத்தின் பாதுகாப்பு குறித்தும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
வடகொரியாவின் அண்மைக்கால அணு ஆயுத பெருக்கங்கள் மற்றும் அந்நாடு மற்றொரு நாட்டுடன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வடகொரியாவுடன் கூட்டாக செயல்படும் மற்றொரு (பாகிஸ்தான்) நாட்டின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பாகிஸ்தானின் பெயரை நேரடியாக அமைச்சர் சுஷ்மா குறிப்பிடவில்லை என்றாலும்கூட பாகிஸ்தான் விஞ்ஞானி ஏ.கியூ.கான் மூலம் அணுவை செறிவூட்டும் தொழில்நுட்பத்தை பெற்றதாக வெளியான தகவலை சுட்டிக் காட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் பாகிஸ்தானின் தீவிரவாத ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்றுதிரட்டும் பணிகளை செவ்வனே செய்துவருகிறார் பிரதமர் மோடி. அந்த வகையில் உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் வடகொரியாவுடன் பாகிஸ்தான் கைகோர்த்திருப்பதாகவும் பாகிஸ்தான் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.