
கேரளாவில் உள்ள கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில், நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்த நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், தடுப்பு நடவடிக்கை மூலமே மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என, சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
இந்த வைரஸ் பரவ காரணம் பழந்திண்ணி வெளவால்கள் தான் என கூறப்பட்டிருந்தது. இதனால் மரத்திலிருந்து கீழே விழுந்த பழங்களை சாப்பிட வேண்டாம் என்றும். பன்றி மற்றும் பிற வளர்ப்பு பிராணிகளிடம் ஒதுங்கி இருக்கும்படியும் சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
நிபா வைரஸ் காய்ச்சலால் முதலில் பாதிக்கப்பட்டு இறந்த இரண்டுபேரின் வீட்டில் இருந்த கிணற்றில், ஏராளமான வெளவால்கள் இருந்தன. அவற்றின் எச்சம் மூலம் தான் அப்பகுதியில் நிபா வைரஸ் பரவியது என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனை தொடர்ந்து அந்த கிணற்றிலிருந்த வெளவால், மற்றும் அப்பகுதியை சேர்ந்த மேலும் சில வெளவால்களிடம் இருந்து, இரத்த மாதிரி ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டது.
மேலும் அப்பகுதியில் உள்ள பன்றி மற்றும் பிற வளர்ப்பு பிராணிகளிடம் இருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வு முடிவில் சாதாரண வெளவால்களிடம் இருந்து இந்த வைரஸ் பரவவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
பழந்திண்ணி வெளவால்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வு முடிவு இன்னும் வரவில்லை. அந்த ஆய்வின் முடிவில் தான் நிபா வைரஸ் பரவ காரணம் பழந்திண்ணி வெள்வால்கள் தானா? என்பதை அறிய முடியும்.