
பாம்பு கடித்த பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய நிலையில் பாலை அருந்திய குழந்தை உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து தாயும் உயிரிழந்தார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 35 வயது பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை பாம்பு ஒன்று தீண்டியுள்ளது. பாம்பு கடித்தது தெரியாத அந்த பெண்மணி, குழந்தை அழுவதைக் கண்டு, குழந்தைக்கு பசியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு பால் புகட்டியுள்ளார்.
ஆனால், பால் குடித்த அந்த குழந்தையோ சிறிது நேரத்தில் மயக்கமுற்றது. மேலும் வாயிலிருந்து நுரை தள்ளியுள்ளது. இதனைத் தொடர்ந்து பால் புகட்டிய தாயும் மயக்கமடைந்துள்ளார். அவருக்கும் நுரை தள்ளியுள்ளது.
இதனைப் பார்த்த அவரது குடும்பத்தார், அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், குழந்தையும், தாயும் மருத்துவமனை செல்லும் முன்பாகவே இறந்து விட்டனர். அந்த பெண்ணைத் தீண்டிய பாம்பை, அவரது குடும்பத்தினர், பக்கத்து அறையில் இருப்பதைக் கண்டறிந்தனர். ஆனாலும் அந்த பாம்பு அங்கிருந்து தப்பியோடி விட்டது.
தாய் மற்றும் சேயின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும், இது தற்செயலாள மரணம்தான் என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.