
ஓட்டல், ரெஸ்டாரண்ட்களில் சாப்பிடும் போது மக்கள் இனி ‘சர்வீஸ் சார்ஜ்’ செலுத்தும் முறையை மத்திய அரசு ரத்து செய்ய முடிவுசெய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சில நாட்களில் பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.
கடந்த ஜனவரி மாதம் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், “ ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்களில் சாப்பிடும் வாடிக்கையாளர்கள் ‘சர்வீஸ் சார்ஜ்’ கட்டாயம் செலுத்த வேண்டியது இல்லை. சேவை மனநிறைவாக இருந்தால், செலுத்தலாம் இல்லாவிட்டால் தேவையில்லை. கண்டிப்பாக கட்டணத்தை வசூலித்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
மேலும், ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் வாடிக்கையாளர்களுக்கு ‘சர்வீஸ் சார்ஜ்’ என்ற பெயரில் 5 முதல் 20 சதவீதம் கட்டணத்தை கட்டாயமாக வசூலிக்கிறது என்ற புகார் எழுந்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ்பாஸ்வானிடம் நிருபர்கள் இது தொடர்பாக கேட்டபோது, “ ஓட்டல், ரெஸ்டாரன்ட்களில் இனி‘சர்வீஸ் சார்ஜ்’ இருக்காது. அந்த கட்டணம் தவறான நோக்கத்தில் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் அனுமதி பெற்றவுடன், விரைவில் முறைப்படியான அறிக்கை வெளியிடப்படும்.
எந்த வாடிக்கையாளரையும் வற்புறுத்தி ‘சர்வீஸ் சார்ஜ்’ செலுத்த கூற முடியாது. ஒருவாடிக்கையாளர் தனக்கு சேவை செய்யும் சர்வருக்கு டிப்ஸ் அளிக்க விரும்பினால், அதை பில் கட்டணத்துடன் சேர்க்கலாம். வாடிக்கையாளர் சம்மதம் இல்லாமல், ‘சர்வீஸ் சார்ஜ்’ வசூலித்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றமாகும்’’ எனத் தெரிவித்தார்.
ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்களில் உணவு வீணாவதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படுமா எனக் கேட்டபோது, அதற்கு அமைச்சர் பஸ்வான் கூறுகையில், “ ஓட்டல்களில் உணவை வீணாக்குவது குறித்து அரசு சட்டம் ஏதும் கொண்டுவராது. அது ஓட்டல் உரிமையாளர்களே பார்த்து திருத்திக்கொள்ள வேண்டும். உணவுகளை வீணாக்காமல் இருப்பது குறித்து அரசு சார்பில் விழிப்புணர்வு ஊட்டப்படும்.’’ என்றார்.