Kerala CM Pinarayi Vijayan : கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான், ஜனநாயக கொள்கைகளுக்கு மாறான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் இடதுசாரிகளின் ஆட்சி தான் தற்பொழுது நடந்து வருகிறது. அங்கு முதல்வராக பினராயி விஜயன் அவர்கள் பதவி வகித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் கேரளாவின் ஆளுநரான ஆரிஃப் முகமது கான் அவர்களுக்கும், பினராயி விஜயன் அவர்களுடைய அரசுக்கும் இடையே ஒருவித மோதல் போக்கு தொடர்ச்சியாக நிலவி வருகிறது.
அண்மையில் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரிலும், ஆளுநர் ஆரிஃப் முகமது அவர்கள் தனது உரையை முழுவதுமாக வாசிக்காமல், வெறும் 1.5 வினாடிகளிலேயே தன் உரையை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க நேற்று ஜனவரி 26 ஆம் தேதி நடந்த குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்ச்சியையும் அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை கொல்லம் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க ஆளுநர் அவர்கள் சென்றுள்ளார். அப்பொழுது நிலமேல் என்கின்ற இடத்தில் அருகே இடதுசாரிகளின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ (SFI) இயக்கத்தினர் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி "கோ பேக்" என்ற கோஷங்களை எழுப்பி வந்துள்ளனர்.
இதனைக் கண்டு கோபமடைந்து, தனது காரை விட்டு வெளியேறிய ஆளுநர் முகமது அவர்கள், அருகில் இருந்த ஒரு டீக்கடையில் இருந்து நாற்காலி ஒன்றை எடுத்து வந்து, நடுரோட்டில் போட்டு அமர்ந்து கொண்டு மாணவர் இயக்கத்தினரை கைது செய்யும் வரை தான் அந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை என்று சுமார் ஒரு மணி நேரம் தர்மாவில் ஈடுபட்டுள்ளார்.
இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் பினராயி விஜயன் ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட பொழுது, சட்டத்தை விட மேலான அதிகாரம் எதுவும் இல்லை, ஆளுநர் முகமது ஆனவர்கள் தனது வாகனத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பு விதிமுறைகளை மீறி உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் ஆளுநர் ஆரிஃப் கான் அவர்கள் தொடர்ச்சியாக இது போன்ற ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும் பேசி அவர், சாலையில் அமர்ந்து ஒரு மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்ட ஆளுநர் அவர்களால், சட்டசபை கூட்டத்தொடரில் ஒரு வினாடி கூட பேச முடியாது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.