இனி ஆதார் கட்டாயமில்லை… மத்திய அரசு அதிரடி !!

By Selvanayagam PFirst Published Jun 13, 2019, 8:44 AM IST
Highlights

தனிநபர் அடையாளத்துக்கு ஆதார் கட்டாயமில்லை என்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து எந்த ஒரு தனிநபரை , எந்த திட்டத்துக்கும் ஆதார் வழங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

17ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குறித்தும், அதில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,முத்தலாக் தடை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் கூட்டத் தொடரில் முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

மேலும் ஆதார் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது தவிர எந்த ஒரு தனிநபரும், எந்த திட்டத்துக்கும் ஆதார் வழங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது எனவும்  அவர் தெரிவித்தார்.

அதுபோலவே மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 7,000 ஆசிரியர் காலிப் பணியிடங்களை இதன்மூலம் நேரடியாக நிரப்பவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாத காலத்துக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன்மூலம் ஜூலை 3ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாத காலத்துக்கு ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.

click me!