காவிரி பிரச்சினை: தமிழகம் உச்ச நீதிமன்றம் செல்ல தேவையில்லை - டிகே சிவக்குமார்!

By Manikanda PrabuFirst Published Aug 15, 2023, 12:38 PM IST
Highlights

காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு இவ்வளவு விரைவாக தமிழ்நாடு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்னைகளை களைவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் கூட்டம் அண்மைல் டெல்லியில் நடந்தது. அந்த கூட்டத்தில், தமிழகத்துக்கு 8,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படும் எனவும், அதுவும் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, தமிழகத்துக்கு வர வேண்டிய 37.97 டி.எம்.சி நீர் பற்றாக்குறையை கர்நாடக மாநிலம் வழங்க எந்த உத்தரவும் இந்த கூட்டத்தில் பிறப்பிக்கப்படவில்லை.

இதையடுத்து, நிலுவையில் உள்ள காவிரி நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 113 பக்கங்கள் கொண்ட விரிவான  மனுவை தமிழக அரசு  தாக்கல் செய்துள்ளது. அதில், “ஆகஸ்ட் மாதம் முழுவதும் காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் திறந்து விட்டிருக்க வேண்டிய 28.8 டி.எம்.சி நிலுவை தண்ணீரையும் திறந்து விட உத்தரவிட வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநிலத்தின் குடிநீர்த் தேவை, தண்ணீர் இருப்பு, விவசாயிகளின் உணர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ள கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரும், துணை முதல்வர் டிகே சிவக்குமார், காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு இவ்வளவு விரைவாக தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், உச்ச நீதிமன்றத்தில் அரசின் நடவடிக்கை குறித்து அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள கேஆர்எஸ் மற்றும் பிற அணைகளுக்கு மழை மற்றும் நீர்வரத்து குறித்த பதிவுகள் எங்களிடம் உள்ளன. நாங்கள் விவசாயிகளுக்கு செய்தி அனுப்பியுள்ளோம். எங்கள் விவசாய அமைச்சர் என்.சலுவராய சுவாமியும் இங்கு பயிர்களை விதைக்க வேண்டாம் என்று விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் நிலைமை அனைவருக்கும் தெரியும்.” என்றார்.

முதன்முறையாக கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திர தினம் கொண்டாடும் ஜம்மு-காஷ்மீர்!

இரு மாநிலங்களுக்கும் நெருக்கடி உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தமிழகம் இவ்வளவு அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என்றார். “தண்ணீர் இருப்பு, மாநிலத்தின் குடிநீர் தேவை, விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தயாராக உள்ளோம். ஆனாலும், தமிழ்நாடு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.” என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

“காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் மேற்பார்வையில் திறந்து விடப்படுவதால், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இரு மாநில விவசாயிகளையும் ஒன்றாகக் காப்பாற்ற வேண்டும். எனவே கவலைப்படத் தேவையில்லை, உண்மைகளின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று தமிழகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் விவசாயிகளை நாங்கள் துயரத்தில் ஆழ்த்த விரும்பவில்லை, நீங்களும் எங்கள் விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தாதீர்கள்.” என்றும் டி.கே.சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

click me!