
தெலங்கானா மாநிலத்தல், செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர், சாலை அமைக்கும் திட்டங்கள் நீர்ப்பாசன திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கக்கூடாது. மத்திய அரசு தன்னுடைய முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றிக் கொள்ளாவிட்டால் நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர்வோம் என தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது-
தெலங்கானா மாநிலத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டு அமல் செய்யப்படும் திட்டங்களின் மீது ஜி.எஸ்.டி. விதித்தால் திட்ட செலவு மதிப்பீடுகள் அதிகமாகி விடும். அந்த கூடுதல் செலவை ஈடுகட்ட மறுபடியும் வரவு செலவு திட்டத்தை திருத்தி அமைக்க முடியாது.
இந்த சிக்கலான நிலையை மாற்ற வேண்டுமானால் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டு இதுபோன்ற திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படாது என அறிவிக்க வேண்டும்.
மாநில அரசுகள் முன்வைக்கும் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் நீதிமன்றத்துக்கு சென்று நியாயம் பெறுவதை தவிர வேறு வழியில்லை. இது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்த பிறகும் மத்திய அரசு 12 சதவீத வரி விதிக்க தீர்மானித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் தேதி அன்று துவக்கப்பட்ட திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பதால் தெலங்கானாவில் மட்டும் திட்ட செலவு 19 ஆயிரம் கோடி அதிகரிக்கும். இந்த நிலை தெலங்கானாவில் மட்டும் இருப்பதாக கூற முடியாது. மற்ற மாநிலங்களிலும் இதே போன்ற சிக்கல்கள் உள்ளன.
மத்திய அரசு எடுத்த முடிவு தன்னிசையாக எடுத்த முடிவு ஆகும். இதனை எதிர்த்து மீண்டும் மத்திய நிதி அமைச்சருக்கும் பிரதமர் மோடிக்கும் கடிதம் அனுப்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.