பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையிலான கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளார் முதல்வ நிதிஷ் குமார்.
பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இடையிலான கூட்டணி ஆட்சி முறிந்துள்ளது. பாஜகவுடனான கூட்டணியை விட்டு முதல்வர் நிதிஷ் குமார் விலகியுள்ளார்.
இதையடுத்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைக்க நிதிஷ் குமார் தயாராகிறார். இன்று மாலை 4 மணிக்கு மேல் ஆளுநரை நிதிஷ் குமார் சந்திக்க உள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து நிதிஷ் குமார் புதிதாக ஆட்சி அமைத்தால், லாலுபிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
பீகார் அரசியல்: ஆட்சி மாற்றம் வருமா? அரசியல் கணக்கு என்ன? ஆர்ஜேட- நிதிஷ் கூட்டணி அமையுமா?
பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக பாஜகவு தலைவர்களுக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு தற்போது விரிசலாக மாறியுள்ளது. மேலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருக்கும் மூத்த தலைவர் ஆர்சிபி சிங்கை வைத்து கட்சியை உடைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தியால் நிதிஷ் குமார் உச்சகட்ட கோபமடைந்துவிட்டார். இதனால் பாஜகவுடனான நட்பை நிதிஷ் குமார் முறித்துக்கொண்டார்.
நிதிஷ் குமாருக்கு ஆதரவு அளிப்பது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. ஒருவேளை நிதிஷ் குமாருக்கு ஆதரவுக் கரம் நீட்டினால், ஆர்ஜேடி, காங்கிரஸ் துணையுடன் மீண்டும் நிதிஷ் குமார் முதல்வர் ஆவார்.
இதற்கு முன் மகாகட்பந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸுடன் நிதிஷ் குமார் இருந்தார். ஆனால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் மீதும், லாலு குடும்பத்தார் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் வந்ததையடுத்து, கூட்டணியை முறித்தார் நிதிஷ் குமார்.
அதன்பின் பாஜகவின் துணையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார். கடந்த 2020ம் ஆண்டு தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர்ந்த நிதிஷ் குமார் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றார். 2 ஆண்டுகள் நிறைவடைந்தநிலையில் பாஜகவுடனான கூட்டணியிலிருந்து மீண்டும் நிதிஷ் குமார் வெளியேறி காங்கிரஸ் கூட்டணியில் சேர உள்ளார்.
பீகார் சட்டப்பேரவை 243 உறுப்பினர்களைக் கொண்டது. இங்கு ஆட்சிஅமைக்க 122 எம்எல்ஏக்கள் ஆதரவு ஒரு கட்சிக்குத் தேவை. ஆனால், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 74 எம்எல்ஏக்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 43, விகாஷீல் இன்சான் கட்சி(விஐபி கட்சி)4, இந்துஸ்தான் அவாமி மோச்சா(ஹெச்ஏஎம்)4 இடங்கள் உள்ளன. ஏறக்குறைய பெரும்பான்மைக்குத் தேவையான 122 எம்எல்ஏக்களைவிட கூடுதலாக 3பேருடன் ஆட்சியில் இருக்கிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 75 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சிக்கு19, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2, மார்க்சிஸ்ட் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளிடம், 110 எம்எல்ஏக்கள் உள்ளனர். இப்போது நிதிஷ் குமார், ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியுன் சேர்ந்தால், 153 எம்எல்ஏக்களாக உயர்ந்து, ஆட்சி அமைக்க முடியும்.