மகாராஷ்டிரா அமைச்சரவை 40 நாட்களுக்குப் பின்னர் இன்று 18 அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மகாராஷ்டிர மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாஜக மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு என மொத்தம் 18 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்றுள்ளனர். துணை முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னவிஸ்க்கு உள்துறை அமைச்சகம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தெற்கு மும்பையில் இருக்கும் ராஜ் பவனில் அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு நடந்தது. சிவ சேனாவில் இருந்து பிரிந்து தனி அணி அமைத்து இருக்கும் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகி இருக்கிறார். துணை முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் இருக்கிறார்.
அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்ததை முன்னிட்டு தனது ஆதரவாளர்களை நேற்று தெற்கு மும்பையில் இருக்கும் சயாத்ரி விருந்தினர் மாளிகையில் ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசினார். சிவ சேனாவில் இருந்த மொத்தம் 55 எம்எல்ஏக்களில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறினர். இவர்கள் பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தனர். 41 நாட்களுக்கு முன்பு முதல்வர், துணை முதல்வர் பதவியேற்று இருந்த நிலையில் இன்று அமைச்சர்கள் பதவியேற்றனர்.
பாஜகவில் இருந்து சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முங்கதிவர், கிரீஸ் மஹாஜன், சுரேஷ் காடே, ராதாகிருஷ்ண விகே பாட்டீல், ரவீந்திர சவ்ஹான், மங்கள் பிரபாத் லோதா, விஜயகுமார் காவித், அதுல் சாவே ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அமைச்சராக இன்று பதவியேற்று இருக்கும் சந்திரகாந்த் பாட்டீல் மகாராஷ்டிரா மாநிலத்தின் பாஜக தலைவராக இருக்கிறார்.
मुख्यमंत्री श्री. एकनाथजी शिंदे आणि उपमुख्यमंत्री श्री. देवेंद्रजी फडणवीस यांच्या नेतृत्वातील युती सरकारच्या मंत्रिमंडळाचा शपथविधी सोहळा. https://t.co/ZLEDnUArMo
— भाजपा महाराष्ट्र (@BJP4Maharashtra)ஏக்நாத் ஷிண்டே அணியில் இருந்து தாதா பூஷே, சாம்புராஜே தேசாய், சந்தீபன் பூம்ரே, உத்ய சாமந்த், தனசி சாவந்த், அப்துல் சத்தார், தீபக் கேசர்கர், குலாப்ராவ் பாட்டீல், சஞ்சய் ரதவுட் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.