
நாளை நடைபெறவுள்ள யோகா தின நிகழ்ச்சியில் பீகார் மாநிலம் பங்கேற்காது என்றும் மோடி அரசு ஒவ்வொரு ஆண்டும் விளம்பரத்துக்காவே யோகா நிகழ்ச்சியை நடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா சபை கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது.
இதையடுத்து முதல் சர்வதேச யோகா தினம் டெல்லியில் கடந்த 2015ம் ஆண்டு பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 191 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
2வது சர்வதேச யோகா தினம் கடந்தாண்டு சண்டிகரில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் யோகா தினத்தின் முக்கிய நிகழ்ச்சியை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ராமாபாய் அம்பேத்கர் மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவருடன் 55 ஆயிரம் பேர் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் விஐபிக்கள் இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் யோகா சிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பீகார் மாநிலம் பங்கேற்காது என அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
விளம்பரத்துக்காகவே மோடி அரசு யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்துவதாகவும் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.