
தமிழக விவசாயிகளைக் கொஞ்சம்கவனிங்கப்பா.....பஞ்சாபில் 10 லட்சம் விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி….முதல்வர் அமரிந்தர் சிங் அதிரடி அறிவிப்பு…
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 10.25 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் அமரீந்தர்சிங் இன்று அறிவித்துள்ளார்.
இதன் மூலம், சமீபத்தில் விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்யும் 4-வது மாநிலமாக பஞ்சாப் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன் உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, தெலங்கானா என 3 மாநிலங்கள் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப்பில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அகாலிதளம், பாஜனதா கூட்டணியை அகற்றிவிட்டு, காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அங்கு முதல்வராக கேப்டன் அமரிந்திங் சிங் உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் வறட்சி காரணமாக தற்கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்தது, வறட்சி ஆகியவற்றால், காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து இருந்தது. அதற்கு ஏற்றார் போல், உத்தரப்பிரதேச அரசும், மஹாராஷ்டிரா அரசும் பயிர்கடன் தள்ளுபடியை அறிவித்தன.
பஞ்சாப் மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்ததால், பயிர்கடன் தள்ளுபடி செய்யுமா என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அனைத்தையும் உடைத்து எறியும் விதமாக முதல்வர் அமரிந்தர்சிங் இன்று பயிர்கடன் தள்ளுபடியை அறிவித்தார்.
அவர் வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
மாநிலத்தில் உள்ள 10.25 லட்சம் விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதில் 8.75 லட்சம் பேர் 2 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை வைத்துள்ள சிறு,குறு விவசாயிகள். அதிகபட்சமாக ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ. 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி கிடைக்கும்.
மேலும், மாநிலத்தில் ஏற்பட்ட வறட்சி, விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்துக்கு சென்று அதற்குரிய காரணம், எதிர்காலத்தில் இது போல் நடக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டியநடவடிக்கைகள், ஆலோசனைகள் அளிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.