இனி எந்தத் தேர்தலிலும் தோற்கக் கூடாது: பாஜக தலைவர் நட்டா உறுதி

By SG Balan  |  First Published Jan 17, 2023, 12:00 PM IST

இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒன்பது மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் அனைத்திலும் பாஜக வெற்றி பெறவேண்டும் என்று பாஜக தலைவர் ஜே. பி. நட்டா பேசியுள்ளார்.


பாஜகவின் தேசிய அளவிலான செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. ஜனவரி 16, 17 ஆகிய இரு நாட்களுக்கு இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாள் செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

முதல் நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மூத்த பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

Tap to resize

Latest Videos

“பாஜக தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா பேசும்போது 2023ஆம் ஆண்டு நடக்கும் ஒன்பது சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் எதிலும் பாஜக தோல்வியைத் தழுவக் கூடாது. தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் நடக்கும் மக்களவைப் பொதுத்தேர்தலிலும் வெற்றி அடைய வேண்டும்” என வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

மேலும், “பிரதமர் மோடி அதிக செல்வாக்கு இல்லாத வாக்குச்சாவடிகளில் கட்சியின் பலத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார். இதுவரை 72 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அத்தகையவை எனக் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கெனவே, 1.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் பாஜகவின் வலிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.

அண்மையில் முடிந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி ஆகியவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது இமாச்சல் தேர்தல் முடிவைக் குறிப்பிட்டுப் பேசிய நட்டா, “தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை நாம் தடுத்திருக்க வேண்டும். ஆனால், இமாச்சலில் அதை நம்மால் செய்ய முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

சமூகத்தின் அனைத்து தரப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் கட்சியில் பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்றும் நட்டா தெரிவித்ததாக ரவிசங்கர் கூறினார்.

மொபைல் மற்றும் கார் உற்பத்தி, வந்தே பாரத் ரயில்கள், இந்தியப் பொருளாதாரம் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்தைப் பிடித்தது போன்றவை பற்றியும் செயற்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

click me!