
2017-18ம் நிதியாண்டுக்கான பொதுபட்ஜெட்டில் வரி குறைப்பு, வருமான வரி உச்சவரம்பு உயர்த்துதல், எளிமையான வரிகள் என பல புதிய மாற்றங்களும், சலுகைகளும் இருக்கும் என பிரதமர் மோடி, நிதிஅயோக், பொருளாதார நிபுனர்கள் ஆகியோருடான ஆலோசனைக்கூட்டத்துக்கு பின் தெரியவந்துள்ளது.
ரூபாய்நோட்டு தடை அறிவிப்புக்குபின், ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதிக்கொள்கை அறிவிப்பிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாகக் குறைத்து மதிப்பிட்டது. பணப்பற்றாக்குறை காரணமாக, பொருளாதார வளர்ச்சியில் தேக்கநிலை ஏற்படும் என எச்சரிக்கை செய்தது . இதனால், அடுத்த நிதியாண்டு பட்ஜெட்டை சிறப்பாகத் தயார்செய்ய மத்தியஅரசு தீவிரம்காட்டி வருகிறது.
வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், ஆனால், அடுத்த ஆண்டு முதல் பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல்செய்யப்படுகிறது. அதை சிறப்பாகச்செய்யவும் இந்தஆலோசனை நடந்துள்ளது.
ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்குப் பின், நாட்டின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, முன்னெடுக்க இப்போதுள்ள வரிமுறையை மாற்றி உயர்வான வரிகளை குறைத்து, எளிமைப்படுத்தி, எளிய முறையில் வரிசெலுத்தும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
“பொருளாதாரக் கொள்கை- செயல்திட்டத்தை நோக்கி” என்ற பெயரில் நிதி அயோக் ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் உலகப் பொருளாதார வல்லுநர்கள், நிதிஅயோக் உறுப்பினர்கள், பிரதமர் மோடி, நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி, நிதி அயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா, மத்தியஅரசின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக பொருளாதார வளர்ச்சியை எப்படி உயர்த்துவது, தொடர்ந்து எப்படி வளர்ச்சியை தக்கவைப்பது, நடப்பு பொருளாதார வளர்ச்சி ஆகியவை ஆலோசிக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு பட்ஜெட்டில், இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேசப்பட்டது.
இது குறித்து நிதிஅயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா கூறுகையில்,
“ வரிமுறையை எளிமைப்படுத்துவது முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. நேரடி வரிகள், கார்ப்பரேட்வரி மற்றும் வருமானவரியை எளிமைப்படுத்தி, படிநிலைகளை அதிகப்படுத்துவது, விதிவிலக்குகளை குறைப்பது, வரி வீதத்தை குறைப்பது, ஒழுங்குமுறைப்படுத்தி சர்வதேச தரத்துக்கு இணையாகக் கொண்டு செல்வதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வேளாண்மை, திறன் ேமம்பாடு, வேலைவாய்ப்பு,வரிவிதிப்பு, குறைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், வீட்டுவசதி, சுற்றுலா, நிர்வாகச்சீர்திருத்தம், வளர்ச்சிக்கான புள்ளிவிவர ஆய்வு ஆகியவை குறித்துகூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
2020ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்துவது, சமூகநலத்திட்டங்களுக்கு செலவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக வேளாண் பொருட்களுக்கு விலை கிடைப்பது, நீர்பாசன முறை, விவசாயிகளுக்கு டிஜிட்டல் பேமெண்ட்டை கொண்டு செல்வது குறித்து பேசப்பட்டது
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், கல்வித்திட்டங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, முறைப்படுத்தப்பட்ட தொழில்களில் அதிகமான தொழிலாளர்களை ஈடுபடுத்துதல், அதிகமான வேலைவாய்ப்பு தந்து கொண்டு இருக்கும் சுற்றுலாதுறை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல அம்சங்கள் பேசப்பட்டது” என்றார்.
ஆதலால், அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு உயர்த்துதல், வரி குறைப்பு, வரிகளை பரவலாக்குதல், அதிகவரிகளை குறைத்தல், புதியகுறைந்த வரிவிதிப்பு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு சலுகைளை எதிர்பார்க்கலாம்.
La