
லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு உதவுபவர்களுக்கு தேவையான ரகசியதகவல்களை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில், காவல்துறை முன்னாள் கண்காணிப்பாளர் அரவிந்த் திக்விஜய்நெகியை தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ)நேற்றுஇரவு கைது செய்தனர்.
நாடுமுழுவதும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு உதவுவோர், அவருக்கு ஆதரவாக இருப்போரைக் கண்டுபடித்து அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை என்ஐஏ எடுத்துவருகிறது. இதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காஷ்மீரைச்ச சேர்ந்த மனிதஉரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸை, தீவிரவாதிகளுக்கு உதவும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி என்ஐஏ கைது செய்தது. இதே வழக்கில் தற்போது முன்னாள் எஸ்பி திக்விஜய் நெகியும் கைதாகியுள்ளார்.
ஸ்ரீநகரில் பர்வேஸ் நடத்தி வந்த ஜம்மு காஷ்மீர் சிவில் சொசைட்டி அமைப்பில் சமீபத்தில் என்ஐஏ அமைப்பினர் சோதனை நடத்தினார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பர்வேஸ், அவரோடு கைதான அர்ஷித் அகமது, முனீர் அகமது கடாரியா ஆகியோருக்கு 40 நாட்கள் காவலை நீதிமன்றம் நீட்டித்தது. இவர்கள் மீது தீவிரவாதிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்தல், தகவல்கள்திரட்டி அளித்தல், பண உதவி செய்தல் போன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு ரகசியமாக உதவும் பிரிவினருக்கு தேவையான தகவல்களை ரகசிய ஆவணங்களை முன்னாள் எஸ்பி. திக்விஜய் நெகி வெளியிட்டதாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, திக்விஜய் நெகியை நேற்று இரவு என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர். ஹிமாச்சலப்பிரதேசம் சிம்லாவில் தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்கும் பல்வேறு வழக்குகளுக்கு திக்விஜய் நெகி தலைமை ஏற்றுள்ளார். என்ஐஏ அமைப்பிலும் பணியாற்றி அதன்பின் வேறு பிரிவுக்கு திக்விஜய் மாற்றப்பட்டார்.
திக்விஜய் யாருக்கு ஆவணங்களை ரகசியமாகக் கடத்தினார் என்ற விவரங்களை என்ஐஏ அமைப்பினர் வெளியிடவில்லை.
இதற்கிடையே தீவிரவாதிகளுக்கு நிதிவழங்கும் வழக்கு ஒன்றில் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்தமைக்காக வீரதீரச் செயல்களுக்கான விருதை கடந்த 2017ம் ஆண்டு திக்விஜய் நெகி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
என்ஐஏ அமைப்பினர் கூறுகையில் “ தீவிரவாதிகளுக்கு உதவுபவர்களைக் கண்டுபிடிக்கும் நெட்வொர்க்கை கண்டறியும் வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு ரகசியமாக தகவல்களைத் திரட்டி, அவர்களின் திட்டங்களை செயல்படுத்த உதவுவோரைக் கண்டறிந்து வருகிறோம்.
இந்தவழக்கில் இதுவரை 6 பேர் கைதாகியுள்ளனர். இவர்கள் மீது ஐபிசி சட்டவிரோத செயல்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திக்விஜய் நெகி, என்ஐஏ தொடர்பான ரகசிய ஆவணங்களை தீவிரவாதிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் சிக்கிய ஒருவருக்குப் பகிர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது” எனத் தெரிவித்தனர்