"வருது... வருது... ரூ. 2000 விலையில் 4G ஸ்மார்ட் போன்..!!!" - மோடியின் அதிரடி ஆஃபர்

First Published Jan 9, 2017, 4:41 PM IST
Highlights


நாட்டில் டிஜிட்டல் பரிமாற்றத்தை மக்களிடையே அதிவேகமாகக் கொண்டு செல்லவும், ஊக்கப்படுத்தவும், ரூ. 2 ஆயிரத்துக்கு குறைவான விலையில் அதிநவீன ஸ்மார்ட்போன்களை தயாரிக்க தனியார் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் நடந்த நிதி அயோக்கின் ஆலோசனைக் கூட்டத்தில் மைக்ரோமாக்ஸ், இன்டெக்ஸ், கார்பன், லாவா ஆகிய நிறுவன அதிகாரிகளிடம் அரசு இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளது. 

அதேசமயம், ஆப்பிள், சாம்சங் நிறுவன அதிகாரிகளும், சீன மொபைல் தயாரிப்பு நிறுவன அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனத் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து, மக்கள் மத்தியில் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக பிரத்யேக ‘பீம்ஸ்’ ஆப்ஸ், யு.பி.ஐ. யு.எஸ்.எஸ்.டி.  ஆகியவற்றை மத்திய அரசுஅறிமுகம் செய்தது. ஆனால், நாட்டில் பெரும்பாலான மக்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால், இதுபோன்ற ஆப்ஸ்களை(செயலி) பயன்படுத்துவதில் சிரமம் இருந்து வருகிறது.

குறிப்பாக கிராமங்களில் உள்ள மக்களுக்கு இந்த செயிலிகள் குறித்து விழிப்புணர்வு உண்டாக்க ஸ்மார்ட்போன் பயன்பாடு அவசியம். ஆதலால், குறைந்தவிலையில், நவீன அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனை தயாரிக்க தனியார் நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது

இது குறித்து நிதி அயோக் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்காக கிராம மக்கள் எளிதாக வாங்கும் விலையில் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். தற்போது சந்தையில் 3ஜி ஸ்மார்ட்போன் ரூ.2500 விலையில் இருந்து தொடங்குகிறது.

ஆனால் 4ஜி ஸ்மார்ட்போன் விலை அதிகமாக இருக்கிறது. நவீன 4ஜி தொழில்நுட்பம், பல அம்சங்களுடன் ரூ.2 ஆயிரம் விலைக்கு குறைவாக ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என அரசு விரும்புகிறது.

இதேபோன்று வசதிகள் கொண்ட  2 முதல் 2.5 கோடி ஸ்மார்ட் போன்களை சந்தையில் விற்பனைக்கு விட வேண்டும் என்று சமீபத்தில் நடந்த கூட்டத்தில் தனியார் நிறுவன அதிகாரிகளிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக எதிர்காலத்தில் ஆதார் அடிப்படையிலான ரொக்கமில்லா பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

இந்த ரூ. 2 ஆயிரம் விலைக்கு குறைவான ஸ்மார்ட் போன்கள் 4ஜி வசதியும், பிங்கர் பிரின்ட் ஸ்கேனர் வசதி, உயர்திறன் பிராஸசர், கேமிராஆகியவை கொண்டதாக இருக்கவும் அரசு  கேட்டுக்கொண்டுள்ளது.

click me!