
10 வகுப்பு வரை பள்ளிகளில் ‘மலையாளம்’ கட்டாயம்….
கேரள அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது
கேரளாவில் 10ம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் தாய்மொழியான மலையாளத்தை கண்டிப்பாக மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று மாநில அரசு நேற்று அவசரச் சட்டம் கொண்டு வந்தது.
அவசரச்சட்டம்
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் பி.சதாசிவம் ஒப்புதல் அளித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின், முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
மலையாளம் கட்டாயம்
மாநில அரசு கொண்டு வந்துள்ள இந்த அவசரச்சட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும். அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. அங்கீகாரம் பெற்ற பள்ளிகளிலும் இனி மலையாளத்தை கண்டிப்பாக கற்பிக்கவேண்டும்.
தடைவிதிக்க கூடாது
இந்த சட்டத்தை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கையும், பள்ளி முதல்வருக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், பள்ளிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாணவர்களை மலையாளம் பேச தடை விதிக்கக் கூடாது. தங்கள் வளாகங்களுக்குள் மாணவர்களை மலையாளத்தில் பேசக்கூடாது என்று அறிவிப்பு செய்யக்கூடாது.
அதிகாரப்பூர்வ மொழி
மே மாதம் 1-ந்தேதியில் இருந்து அனைத்து அரசு அலுவலங்களிலும், மலையாளம் என்பது காட்டாயமாக்கப்பட்டு, அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசரச்சட்டம் என்பது, அரசு நிதி உதவி பெறும் கல்விநிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், சுயாட்சி கல்வி நிறுவனங்கள், கூட்டுறவு துறைகள் அனைத்துக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவ கல்லூரிகள்
மருத்துவக்கல்லூரிகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “ மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒழுங்கு படுத்தவும் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டத்தின் அடிப்படையில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு மருத்துவக்கல்லூரியின் கட்டணத்தை நிர்ணயிக்கும்.
மேலும், அரசு, தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு அனைத்து மாணவர்களுக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் நீட்தேர்வின் தேர்வு பெற்று, அதன் தகுதியின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்தார்.