வெளிநாட்டில் இருந்து இந்தியாவரும் பயணிகளுக்கான கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து இந்தியாவரும் பயணிகளுக்கான கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சீனா, தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக ஒமைக்ரான் வைரஸின் பிஎப்-7 வகை வைரஸ் சீனாவில் தீவிரமாக பரவுகிறது. சீனாவில் தினசரி ஆயிரக்கணக்கானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்படுகிறார்கள், நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள். ஆனால் உண்மையான தகவல்கள் ஏதும் சீனா இதுவரை வெளிஉலகிற்கு அறிவிக்கவில்லை.
இந்நிலையில் உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியிருப்பதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன்படி, வெளிநாட்டிலிருந்து இந்தியா வருவோருக்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு
1. வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக முழுமையான தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.
2. விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்போது கொரோனா அறிகுறி இருந்தால், விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா அறிகுறி இருந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
3. அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பயணிகள் சமூக விலகலை விமானத்தில் கடைபிடிக்கவேண்டும்.
4. விமானத்தில் கொரோனா அறிகுறியுள்ள பயணி தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், அவருக்கு விமானநிலையத்தில் தேவையான சிகிச்சை அளி்க்கப்படும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
5. விமானநிலையத்துக்கு வரும்போதும், புறப்படும்போது பயணிகள் அனைவரும் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும்.
6. விமானநிலையத்துக்குள் நுழையும் போது ஒவ்வொரு பயணியையும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள்.
7. தெர்மல் ஸ்கேனிங் செய்யும்போது பயணி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தால், உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
8. வெளிநாட்டில் இருந்து பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ராண்டமாக கொரோனா பரிசோதனை விமானநிலையத்திலேயே செய்யப்படும். ஒவ்வொரு விமானத்தில் இருந்தும் பயணிகளில் குறிப்பிட்ட சிலருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதில் ஒரே நாட்டவர்கள் இல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், வருவோருக்கும் நடத்தப்படும். பரிசோதனைக்கான மாதிரிகள் எடுத்தபின் அவர்கள் விமானநிலையத்தில் இருந்து செல்ல அனுமதிக்கப்படும்.
9. ஒருவேளை மாதிரியில் கொரோனா இருப்பது உறுதியானால், அவர்களின் மாதிரி அடுத்தகட்ட மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். பாதிக்கப்பட்ட பயணிக்கு அந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முறையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும்.
10. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிக்கு கொரோனா இருப்பது உறுதியானால், அவர் தன்னுடைய உடலை சுயகண்காணிப்பு செய்ய வேண்டும், அல்லது அருகே உள்ள மருத்துவமனை அல்லது மாநிலஉதவி மையத்திடம் பேசி சிகிச்சை பெற வேண்டும்.
11. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ராண்டம் பரிசோதனை கிடையாது. ஒருவேளை தெர்மல்ஸ்கேனில் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால், அவர்களுக்கு உரிய சிகிச்சைவழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.